சீனா, கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான மேலதிக வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் உறுதிப்படுத்தியதையடுத்து, பதிலடி கொடுப்பதாக அந்த நாடுகளும் அறிவித்துள்ளன.
அமெரிக்க இறக்குமதிகள் மீது செவ்வாய்க்கிழமை முதல் கனடாவும் வரிகளை விதிக்கும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் அத்தியாவசியப் பொருட்கள், எரிவாயு போன்றவற்றுக்கு அதிக பணம் செலுத்த நேரிடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் வேலைகளை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக, கனடாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் சுமார் 30 பில்லியன் (20.6 பில்லியன் அமெரிக்க டொலர்) கனேடிய டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக, பெய்ஜிங் அமெரிக்க விவசாய மற்றும் உணவுப் பொருட்களையும் இலக்கு வைப்பதற்கான வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை,மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமும் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.