போதைவஸ்த்துக்களை அரசாங்கமே மக்களிற்கு விநியோகிக்கும் நிலைமை – சத்தியலிங்கம்

போதைவஸ்த்துக்களை அரசாங்கமே தனது சொந்த மக்களிற்கு விநியோகிக்கும் மிகமோசமான நிலைமை
நாட்டில் காணப்படுவதாக இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர்
பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நிலைமையை அரசு தொடரக்கூடாது.

போதைவஸ்த்து பாவனை நாடு முழுவதிலும் காணப்பட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.

இது போரிற்கு பின்னரான சமூகவிளைவாகவே நான் பார்க்கின்றேன்.
அந்த வகையில் இந்த போதைவஸ்த்து பிரச்சனையை கட்டுப்படுத்தவேண்டுமாக இருந்தால்
நாட்டினுடைய சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும்.

சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் போதைவஸ்த்து பாவனையை கட்டுப்படுத்த முடியாது.
தடுப்பதற்கான சட்டங்கள் இருந்தபோதபோதிலும் அதனை கடந்த காலங்களில் அரசாங்கங்கள் முழுமையாக
நடைமுறைப்படுத்தவில்லை என்பதை மறுக்கமுடியாது.

போர் முடிவடைந்த பின்னர் குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்விகற்கின்ற
மாணவர்களுக்கு அரச இயந்திரத்தில் இருந்த படையினர் போதைவஸ்த்துக்களை விநியோகித்தார்கள்
என்பது உண்மை அதன் தொடர்ச்சியான நிலைமையை தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து செய்யாது என்ற நம்பிக்கை
எமக்கு உள்ளது.

போதைவஸ்த்துக்களை அரசாங்கமே தனது மக்களிற்கு விநியோகிக்கும் நிலைமையை இந்த அரசு தொடரக்கூடாது என்பது
எனது வேண்டுகோளாகும்.

ஆகவே இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும்.
மதுப்பாவனைக்கான வயதுக்கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும்.
எமது பிரதேசங்களில் மக்கள் தொகைக்கு மேலதிகமாக மதுபான நிலையங்கள் காணப்படுகின்றன.
பொது இடங்களில் மதுபாவனை நடைபெறுகின்றது.

சட்டவிரோத போதைப்பாவனையை கட்டுப்படுத்தகூடிய சட்ட அதிகாரம் பொலிசாரிடம் இருக்கின்றது.
அதனை அவர்கள் பயன்படுத்துகின்றார்களா என்றால் இல்லை.
இதனை நான் பகிரங்கமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மதுப்பாவனை போதைப்பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான
மருத்துவபுனர்வாழ்வு நிலையங்கள் எமது மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி கிளிநொச்சியில் தர்மபுரம் முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் வவுனியாவில் பூவரசங்குளம்
மன்னாரில் அடம்பன் ஆகிய இடங்களில் மருத்துவ புனர்வாழ்வு நிலையங்கள் காணப்படுகின்றது.
எனினும் அவை சீராக இயங்குவதற்கான ஆளணிப்பற்றாக்குறை காணப்படுகின்றது.
எனவே சுகாதார அமைச்சர் அதற்கான தீர்வினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் மேலும் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version