சுனிதா வில்லியம்ஸ் உட்பட 04 விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் இன்று (19.03) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது.

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக புதன்கிழமை அமெரிக்காவின் புளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இந்திய நேரப்படி நேற்று காலை 10.30 இற்கு புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 17 மணி நேர பயணத்துக்குப்பின் பூமியில் தரையிறங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ள கப்பல், கடலில் பாதுகாப்பாக இறங்கியுள்ள டிராகன் விண்கலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இந்த நிலையில், ஒவ்வொரு வீரர்களாக விண்கலனிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு கப்பலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்த 30 நிமிடங்களில் அதிலிருந்து வீரர்கள் வெளியே அழைத்து வரும் பணி நிறைவடைந்தது.

அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version