வவுனியாவில் தாம் கல்வி கற்ற 27 பாடசாலைகளை ஒன்றிணைத்து “வவுனியா சங்கமம் அறிமுகம் ” என்னும் நிகழ்வினை ஐக்கிய இராச்சியத்தில் இயங்குகின்ற வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றிய நிறுவனம் நடத்தியது.
வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் இன்று (22 .3 .2025) சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பண்டார வன்னியனுக்கு மலர் வணக்கம் செய்யப்பட்டது. பண்டார வன்னியன் பற்றிய ஒரு விவரண சித்திரம். எல் .ஈ. டி திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
நிருத்தியார்ப்பணா நாட்டிய கலாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. இளங்கலைச்சுடர் அருந்தவநாயகம் சுஜேந்திரா
நெறியாள்கை செய்தார்.
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியத்தின் இணைச்செயலாளர் முத்தையா சேனாதிராஜா வரவேற்புரை வழங்கினார்.
வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியத்தினால் லண்டனில் நடத்தப்பட்ட வவுனியா சங்கமம் 24 நிகழ்வின் காணொளி காட்சி காண்பிக்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இந்திரன் சஜீ தலைமை உரை வழங்கினார்.
அவர் தனது உரையில் மனித வாழ்வில் பாடசாலையின் முக்கியத்துவம் பற்றியும் பழைய மாணவர்களின் பாடசாலைகளுக்கான பங்களிப்பு
பற்றியும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியத்தின் பேராளர்கள் தலைவரினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து இயங்குகின்ற வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான இணைப்பாளர்கள்
அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
லண்டனில் வெளியிடப்பட்ட “சங்கமம் 24 “என்னும் நூல் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை உப பீடாதிபதியும் எழுத்தாளருமான திரு .ந. பார்த்திபன் அவர்கள் நூலினை
சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைத்தார். பாலகாந்தன் பிரசன்னா அவர்கள் பாடல் பாடி சபையினரை மகிழ்வித்தார்.
தொடர்ந்து தாலிக்குளம் நிருத்திய திருநிதி கலாசாலையின் மாணவர்களினால் சிறந்த கிராமிய நடனம் ஒன்று ஆற்றுகை செய்யப்பட்டது. நுண்கலைமாணி திருமதி. வக்சன் றுக்சலா அவர்கள் நடன நிகழ்வை நெறியாள்கை செய்திருந்தார்.
கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது வழங்கிய உதவிகள் தொடர்பான காணொளி காட்சி காண்பிக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்திலுள்ள 25 முன்பள்ளிகளுக்கு, ஐக்கி இராச்சியத்தில் இயங்குகின்ற வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியத்தினால்
தொலைக்காட்சிகள் வழங்கி வைக்கப்பட்டன.
உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.முரளிதரன் அவர்கள் முன்பள்ளிகளின் சார்பில் உரையாற்றினார். அவர் தனதுரையயில் முன்பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் சம்பளம் தொடர்பான தேவைகளை எடுத்துரைத்தார்.
முன்பள்ளிகளின் ஆசிரியர்களுடைய வேதனங்கள் தொடர்பாக கவனமெடுக்குமாறு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள்
விடுத்தார்.
ஐக்கிய இராச்சியத்தில் இயங்குகின்ற வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ. ஞானேஸ்வரன் அவர்கள் நன்றி உரை வழங்கினர்.
இரா.இராஜேஸ்வரன், விமல் இருவரும் இணைந்து நிகழ்வினை சிறப்பாக தொகுத்து வழங்கினர்.
இந்ந நிகழ்வானது பகல் 12.30 இற்கு இனிதே நிறைவு பெற்றது.
