வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய கருத்தை ஊடகமொன்று திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களைச் சந்திப்பதற்காக, போக்குவரத்து பெருந் தெருக்கள், துறைமுக, மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்றைய தினம் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அவருடன் வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் (29.03) வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே,
அரசியல் கைதிகளை ஒருபோதும் விடுதலை செய்ய மாட்டோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க
கூறியதாக, ஊடகம் ஒன்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.
தோழர் பிமல் ரத்னாயக்கா
ஒரு போதும் அவ்வாறு கூறவில்லை.
அரசியல் வங்குரோத்து நிலை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான ஊடகங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
அரசியல் கைதிகளுக்குரிய வழக்குகள் சட்ட ரீதியாக ஒழுங்கு செய்யப்பட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் தேசிய மக்கள் சக்தி அதனை நிச்சயமாக செய்யும் என நான் கூறுகின்றேன்.
இவ்வாறான போலியான செய்திகள் தேசிய மக்கள் கட்சியின் வெற்றியை ஒருபோதும் தடை செய்யாது தேசிய மக்கள் சக்தி வட மாகாணத்திலும் நாடு முழுவதிலும் முழுமையான வெற்றியைப் பெறும்” என்றார்.