இனவாதத்தைக் கொண்டு இனியும் அரசியல் செய்ய முடியாது – பிரதியமைச்சர் பிரதீப்

இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு மிகப் பெரிய ஆளணியாகத் திரண்டிருக்கிறார்கள் எனப் பெருந்தோட்ட, மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர், பிரதீப் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

மன்னார் எழுத்தூரில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் வட்டார அலுவலகத்தை கடந்த வியாழக்கிழமை, மாலை (10.04) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

இன்று நாட்டிலே பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது இதுவரை காலமும் ஆட்சியதிகாரம் தம்மை உயர்ந்த வர்க்கமென்று கூறிக்கொள்பவர்களிடம் தான் இருந்தது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மூவின மக்களும் இணைந்து சாதாரண மக்களிடம் இந்த ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். ஒரு விவசாயியின் மகன் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச உட்பட
தனிப்பட்ட ரீதியாக எந்த அரசியல் வாதிகள் மீதும் எங்களுக்கு கோபம் கிடையாது.அவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் இந்த நாட்டின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.மக்களின் பணத்தில் தங்களுக்குச் சொத்துக்கள் குவித்தார்கள். கொலைக் கலாச்சாரத்தை உருவாக்கினார்கள். சாட்சிகளை அழித்தார்கள்.
ஆனால் இன்று எங்களுடைய ஆட்சியில் தான் எல்லாவிதமான குற்றச் செயல்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.எனவே மிக விரைவில் அநீதியில் ஈடுபட்டவர்கள் சிறையிலடைக்கப் படுவார்கள். தேசிய மக்கள் சக்தி மீது, மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஒரு போதும் வீணாகாது.

மக்கள் எதிர்பார்த்த உண்மையான மாற்றத்தையும் ஆட் சியையும் மக்களுக்கு நிச்சயமாக வழங்குவோம்” என்றார்.

குறித்த மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மன்னார் நகரசபை வேட்பாளர்கள்,கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version