கல்வி சீர்திருத்தத்தின் மூலம் மனித வளத்தை வினைத்திறனாக பயன்படுத்துவதே எதிர்பார்ப்பு – பிரதமர்

எமது நாட்டின் மிகவும் பெறுமதிவாய்ந்த வளம் மனித வளமாகும். கல்வி சீர்திருத்தத்தின் மூலம் இந்த மனித வளத்தை வினைத்திறனாக பயன்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

குருநாகல் பொல்கொல்ல தேவபால கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று (26.04) இடம்பெற்ற கல்லூரியின் 30 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எமது நாடு கல்விக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது. அதனால்தான் நாம் ஏழைகளாக இருந்தாலும், மானிட அபிவிருத்தியில் முதலிடத்தில் இருக்க முடிந்துள்ளது. மனித வளத்தை முன்னேற்ற கல்வி நிலை முன்னேற்றப்பட வேண்டும்.”

எமது நாட்டில் சிறந்த பாடசாலைகள் , மோசமான பாடசாலைகள் என்று இருக்க முடியாது. பிரபலமான பாடசாலைகள் பிரபல்யமற்ற பாடசாலைகள் என்ற வித்தியாசமும் இருக்க முடியாது. எமது நாட்டில் உள்ள அனைத்து பிள்ளைகளும் ஒரு சிறந்த பாடசாலையைப் பெறுவதை உறுதி செய்வது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

ஒற்றுமை மற்றும் பிறரிடம் கருணை போன்ற நற்பண்புகள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்க எமது கல்வி மேலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். எமக்குப் பின்னர் இந்த நாட்டைப் பொறுப்பேற்க எம்மை விட திறமையானவர்கள் இருக்க வேண்டும் என்று எமது ஜனாதிபதி எப்போதும் கூறுவார். இந்தத் தலைமுறையில் நாம் எமது பொறுப்புகளைச் சரியாகச் செய்து வருவதைப் போன்று, இந்த நாட்டை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு வர நாங்கள் முயற்சிப்பதைப் போன்று, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எம்மைப் பார்க்கிலும் திறமையான தலைமுறை தேவை. அந்த தலைமுறையை உருவாக்கக்கூடிய கல்வி சீர்திருத்தங்களை செயற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று பிரதமர் கூறினார்.

இந்நிகழ்வில், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய , விசேட அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version