கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்நாட்டு அரசியல் பிரச்சினை, ட்ரம்பின் வரி விதிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த
லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து மார்க் கார்னி கடந்த மாதம் 14 ஆம் திகதி கனடாவின் 24 ஆவது பிரதமராக பதவியேற்றார்.
கனடா நாடாளுமன்றத்தின் பதவிகாலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.
இதற்கமைய ஏப்ரல் 28 ஆம் திகதி கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கியதுடன் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார்.
343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 164 இடங்களில் முன்னணியில் உள்ளதுடன் கன்சர்வேடிவ் கட்சியினர் 147 இடங்களில் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தோ்தலில், லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தனி பெரும்பான்மையுடன் அக்கட்சி அரசு அமைக்குமா என்பது இன்றிரவு வெளியாகும் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரிய வரும்.