இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி பலமான நிலையில் தமது இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது.
இரண்டாம் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி 151 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 484 ஓட்டங்களை பெற்ற நிலையில் நிறைவு செய்தது. இன்று காலை 11 ஓட்டங்களை மேலதிகமாக பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி 153.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 495 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சிறப்பாக துடுப்பாகிய நஜிமுல் ஹொசைன் சான்டோ 148 ஓட்டங்களை பெற்று இன்று காலை ஆட்டமிழந்தார். இது அவரின் ஆறாவது டெஸ்ட் சதமாகும். தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடிய முஸ்பிகீர் ரஹீம் 163 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 12 ஆவது சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார். இது இலங்கை அணிக்கெதிரான நான்காவது சதமாகும். இலங்கை அணிக்கெதிராகவே முதல் இரட்டை சதத்தை பெற்றுக்கொண்டார் ரஹீம். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக 364 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். லிட்டோன் டாஸ் 90 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இவர் வேகமாக துடுப்பாடி பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். ஐந்தாவது விக்கெட் இணைப்பாடமாக ரஹீம்-டாஸ் ஜோடி 149 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
பங்களாதேஷ் அணியின் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், மத்திய வரிசையில் சிறந்த மீள்வருகையை ஏற்படுத்தி பலமான நிலைக்கு சென்றுள்ளனர். முதல் நாளில் மூன்று விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் நேற்று 6 விக்கெட்களை பங்களாதேஷ் அணி இழந்து. குறிப்பாக இரண்டாம் நாள் நிறைவடைவதற்கு முன்னதாக அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தமை அவர்களுக்கு பின்னடைவைஏற்படுத்தியது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். தனது முதற் போட்டியில் விளையாடும் தரிந்து ரத்நாயக்க மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். மிலான் ரத்நாயக்க மூன்று விக்கெட்களை கைபபற்றிக்கொண்டார். இணைப்பாடங்கள் முறியடிக்கப்பட்டு நிலையில் அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணி பங்களாதேஷ் அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இலங்கை அணியின் களத்தடுப்பு போதியளவு சிறப்பாக அமையாமையும் பங்களாதேஷ் அணியை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு ஒரு காரணமாகும்.
தற்போது பங்களாதேஷ் அணி காணப்படும் நிலை இந்தப் போட்டியில் தோல்வியடைய மாட்டார்கள் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. மழை வாநிலை காணப்படுவதனால் போட்டி சமநிலை நோக்கி செல்லும் வாய்ப்புகளை கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதற் போட்டி. சொந்த நாட்டில் வெற்றிகளை குறி வைப்பதே இந்த தொடருக்கு சாதகமான நிலைகளை தரும். பங்களாதேஷ் போன்ற ஒரு நாட்டுடன் சமநிலை நோக்கி செல்வது சாதக தன்மையல்ல. மீதமுள்ள மூன்று நாட்ட்களில் இலங்கை அணி சாதக தன்மையை ஏற்படுத்த போறா வேண்டும். அத்தோடு மழையோடும் போராட வேண்டிய நிலை காணப்படுகிறது.