இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Dr. Siri Walt) மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (24.02) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் இளைஞர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இளைஞர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

எதிர்காலத்தில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், சுவிட்சர்லாந்து தூதரகமும் இணைந்து பல புதிய திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவதற்கும், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அமைச்சினால் அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் உடன்பாடு எட்டப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் குமார கமகே, எந்தவொரு இளைஞர் அபிவிருத்தித் திட்டத்தையும் வெளிப்படைத்தன்மையுடன் ஆரம்பிப்பதற்கான முழுமையான வாய்ப்பு உள்ளதாக வலியுறுத்தினார்.

“எமது அரசாங்கம் ஊழலற்றது. எனவே, இலங்கை இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை உலகச் சந்தைக்குப் (Global Market) பொருத்தமான தகுதியுள்ளவர்களாக மாற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் எங்களுடன் இணைந்து நீங்கள் ஆரம்பிக்க முடியும்,” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. அருண பண்டார, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply