ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆசிரியர் சமூகம் பழிவாங்கும் செயல்களில் மும்முரம்.
கொழும்பின் தமிழ் மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 05 மாணவிகள் வகுப்பாசிரியரால் அடுத்தடுத்த இரு தினங்களில் பிரம்பால் தழும்பு வருமளவுக்கு தாக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு மாணவி கடும் சுகயீனங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் வைத்தியர்களின் மேலதிக சோதனைகளில், மாணவிக்கு குறித்த நோய் பயம் மற்றும் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.பின்னர் மனநல வைத்திய நிபுணர் சோதனை செய்து உறுதி செய்துள்ளார்.
இதன் பிரகாரம் குறித்த பாடசாலை ஆசிரியரிடம் விபரத்தைக் கூறி வகுப்பு மாற்றம் கேட்டபோது அவ்வாறு செய்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் புதிய வகுப்புக்கு சென்ற நிலையில், தாக்குதலை மேற்கொண்ட வகுப்பாசிரியர் மற்றைய ஆசிரியரிடம் முரண்பட்ட நிலையில், குறித்த மாணவி அந்த வகுப்புக்கு செல்லாமல் மாற்று நடவடிக்கைகள் எடுக்கலாம் என அதிபர் கூறியுள்ளார். இந்த நிலையில் குறித்த மாணவியின் தாயான ஆசிரியரிடம் பாடசாலையின் உப அதிபர்கள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதோடு, மாணவி திறமையற்றவர் மற்றும் ஒழுக்கமற்றவர் என்ற தொனியில் பேசிய அதேவேளை, மாணவியின் தகப்பனையும் இழுத்து அச்சுறுத்தியுள்ளனர்.
தமக்கும், பிள்ளைக்கும் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதையும், பழிவாங்கும் செயற்பாடு ஆரம்பிப்பதையும் உணர்ந்த தகப்பன், பொலிஸ் முறைப்பாட்டை செய்துள்ளார். அத்தோடு கல்வி அமைச்சர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட முறைப்பாட்டுக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் அதிபர், ஆசிரியர் உட்பட இனி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது. வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்கிறோம். பழிவாங்குதல் நடவடிக்கைகள் இடம்பெறாது. தாயான ஆசிரியர் மீது அழுத்தம் வழங்கப்படாது என்ற உறுதிமொழிகள் வழங்கப்பட்ட பின்னர் குறித்த முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் விடயம் மேலும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. குறித்த பாடசாலையோடு நின்றுவிடாமல் ஏனைய பாடசாலைகள் வரை வியாபித்துள்ளது. பாடசாலைக்குள்ளும் வெளியும் தாயான ஆசிரியர் மீது மோசமான சேறு பூசும் வேலைகள் இடம்பெறுகின்றன. தகப்பன் மோசமானவர், சண்டைக்காரன் போன்ற கதைகள் பரப்பி விடப்பட்டுள்ளன. அவற்றைத் தாண்டி பிற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவியின் சகோதரர்கள் இருவர் குறிவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கொழும்பின் முன்னணி பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டாம் தர மாணவனான மாணவியின் தம்பியார், தரம் 05 இற்கு வரும் போது தான் சம்பவம் செய்கிறேன் என ஒரு ஆசிரியர் கூறியதாகவும் குறித்த பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆசிரியர்கள் தம்மீதான குற்றத்தை மறைத்து, தாம் தப்பித்துக்கொள்வதற்காக இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது எந்தளவுக்கு மோசமான செயல் என பெற்றோர் விசனம் வெளியிடுகின்றனர். பாடசாலைக்கு செல்ல பயந்து போயுள்ள பிள்ளை இவ்வாறான சூழலில் எவ்வாறு பாடசாலைக்கு செல்ல முடியும்? பிள்ளையின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? யார் பாதுகாப்பு? எனவும் பிள்ளையின் பெற்றோர் கேள்வியெழுப்புகின்றனர். சுமூகமாக முடித்துத் தாருங்கள் என்ற கோரிக்கையோடு சென்ற குறித்த பிள்ளைக்கும் பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ள அநீதி ஏற்புடையதா?
இவ்வாறான சம்பவங்கள் மற்றும் சூழலில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு பாடசாலைகளில் கேள்விக்குறியாகியுள்ளது. இது ஒரு மாணவிக்கு நடைபெற்ற அநீதி கிடையாது. பலருக்கும் இவ்வாறு நடைபெறுகின்றன. பயம் மற்றும் போதிய அறிவின்மை காரணமாக பல பெற்றோர் சத்தமின்றி சமாளித்துக்கொண்டு செல்கின்றனர் என்பதுதான் உண்மை.