“எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை கொள்கையாகும்” எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சரசவி திரியோ அபிமன்” – மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளைப் பாராட்டும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் ஆகஸ்ட் 22ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 75 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியையும் பிரதமர் இதன்போது வழங்கி வைத்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
இலங்கையின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பாராட்டப்படுகின்றனர். இந்தக் கௌரவிப்பின் உற்சாகத்தினால் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் உங்களைப் பின்தொடர்வார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது நாட்டில் அதிகளவிலான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசிக்கின்றார்கள், அது அந்தக் கசப்பான போரின் மற்றுமொரு விளைவாகும். மீண்டும் ஒரு போர் ஏற்படாத வகையில் செயலாற்றி வரும் ஓர் அரசாங்கம் என்ற வகையிலும், போர் ஏற்படுவதற்கான காரணிகளை அகற்றி வரும் ஓர் அரசாங்கம் என்ற வகையிலும் இந்நிகழ்ச்சித் திட்டத்தை இந்தப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

ஜனாதிபதி நிதியம் என்பது சலுகை படைத்தவர்களுக்குக் கிடைத்த மற்றுமொரு சலுகை என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதனை மக்களிடம் கொண்டுசேர்க்கக் கிடைத்தமை நாம் பெற்ற வெற்றியாகும். அதேபோன்று எவரையும் கைவிடாது அனைவருக்கும் சமத்துவமான சமூகமொன்றைக் கட்டியெழுப்பவே நாம் முயற்சிக்கின்றோம்.
நீங்கள் இங்கு வந்து சேர்ந்த பயணம் இலகுவானதொன்றல்ல. ஒரு சாதாரண மாணவனை விட பல மடங்கு பௌதிகத் தடைகள், சிரமங்கள், அதேபோன்று சில சந்தர்ப்பங்களில் சமூகத்திலுள்ள மனப்பாங்கு சார்ந்த தடைகளைக் கூட நீங்கள் வெற்றிகொள்ள வேண்டியிருந்திருக்கும். இருப்பினும், உங்களது தங்கைமார், தம்பிமாருக்கு இந்தப் பயணத்தை இன்னும் இலகுவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
உங்களது தளராத மன உறுதியினாலேயே இன்று நீங்கள் பல்கலைக்கழக மாணவர்களாக என் முன்னால் இருக்கின்றீர்கள். நீங்கள் சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிகொள்ளும் விதம் நமது நாட்டிலுள்ள ஏனைய இளைஞர் சமூகத்தினருக்கும் பெரியதொரு முன்மாதிரியாகும். சிறிய பிரச்சினைகள், தடைகள் காரணமாக வாழ்க்கையை வெறுத்துக்கொள்ளும் இளைஞர் சமூகத்திற்கு உங்கள் விடாமுயற்சி ஒரு உயிர்ப்புமிக்க முன்மாதிரியாகும்.
இன்று மண்டபத்தின் பின்வரிசையில் அமர்ந்திருக்கும் உங்களது அன்பிற்குரிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்த விசேட தருணத்தில், நான் மிகவும் கௌரவத்துடனும் நன்றியுடனும் நினைவுகூர விரும்புகிறேன். அவர்களே உங்களுக்குச் சக்தியாக இருந்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை நாம் கைவிட்டுச் செயற்பட மாட்டோம். அதனாலேயே குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அத்தோடு அவர்களுக்கு கல்வி கற்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கான முன்னோடித் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இன்று நீங்கள் பெறும் இந்தப் பாராட்டானது உங்களது பயணத்தின் முடிவல்ல. இது உங்களது பிரகாசமான பயணத்தின் ஆரம்பமாகும்.
உங்களுக்கு உடல்ரீதியாக எத்தனை தடைகள் இருந்தபோதிலும், உங்களது கனவுகளுக்கு எந்த வரையறைகளையும் வகுத்துக்கொள்ளாதீர்கள். அந்தக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள அயராத முயற்சியுடன் முன்னோக்கிச் செல்லுங்கள். உங்களது அந்த முயற்சிகளுக்குப் பின்னால் அரசாங்கமும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இருப்பார்கள், என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி. ஜி. எஸ். சி. ரொஷான், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எம். பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.