பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிதியுதவி

அண்மையில் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கான நிதியுதவியை நேற்று (15/12) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் கையளித்தார்.

பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பில் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இந்த தருணத்தில் இரு பிள்ளைகளினதும் எதிர்காலம் மற்றும் குடும்பத்தினரின் நிதிப் பாதுகாப்பே கரிசனைக்குரிய பிரதான விடயமாகும் எனத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நிதியுதவிகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் பிரியந்தவின் வழக்கை விசாரணை செய்வதற்காக பாகிஸ்தானில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக அமைச்சர் பீரிஸ்; தெரிவித்தார்.

இதேவேளை, பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சியால்கோட் பிரதேச வர்த்தக சமூகம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், விசாரணையின் முன்னேற்றங்களை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், மரணத்திற்குக் காரணமானவர்கள் விரைவாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் வெளிநாட்டு அமைச்சர் மேலும் உறுதியளித்தார்.

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிதியுதவி
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version