டக்ளஸின் கருத்தினை ஏற்றார் சுமந்திரன்

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற தேவையில்லை என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுக் கொண்டார்.

கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகளின் போது, பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் நடமுறைச் சிக்கல்களினால், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் தாமதங்கள் ஏற்படுவதாக நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் தெரிவித்திருந்தார்.

இதன்போது, சம்மந்தப்பட்ட சட்ட பிரதியை காண்பித்த அமைச்சர் டகளஸ் தேவானந்தா, அதில் சொல்லப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கேட்டுக் கொண்டார்.


அதன் சட்ட விடயங்களை ஆராய்ந்து, அனுமதி தேவையில்லை எனப்தனை சுமந்திரன் உறுதி செய்தார்.

கடற்றொழில் அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடலட்டை ஏற்றுமதி ஊடாக 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 30 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும் என்ற கடற்றொழில் அமைச்சரின் இலக்கிற்கு அமையக் கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (17.12.2021) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இதுதொடர்பாக மேலும் தெளிவுபடுத்திய தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை எனப்படும் நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் திரு நிருபராஜ், கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்ற பின்னர் கிளிநொச்சியில் 270 கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 616 இற்கும் மேற்பட்ட பண்ணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பூநகரிப் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 196 ஏக்கர் காணிகளை விவசாயப் பண்ணை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்றினால் விண்ணப்பித்தமை தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த விடயம் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட நிலையில், மேற்குறித்த விடயத்தினை தெரிவித்த இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பால் தேவையைக் கவனத்தில் கொண்டு மாடு வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்குமாறும் அதேபோன்று ஆடு வளர்ப்பிலும் தேவையான அக்கறை செலுத்துமாறும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கினார்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஆராயப்பட்டதுடன் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில், பிரதேச சபைகளில் காணப்படுகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விசேட தீர்மானத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ள கரைச்சி பிதேச சபை தவிசாளரான வேழமாலிகிதன், இராணுவப் பயன்பாட்டில் இருக்கின்ற கரைச்சி பிரதேச சபை நூலகத்திற்கான பகுதிக் கட்டிடத்தினையும் விடுவித்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

டக்ளஸின் கருத்தினை ஏற்றார் சுமந்திரன்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version