‘சர்வதேச சிவில் விமான சேவைகள் தினம்’

77ஆவது சர்வதேச சிவில் விமான சேவைகள் தினம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (23/12), கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை சிவில் விமானச் சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1944ஆம் ஆண்டில் 26 நாடுகள் ஒன்றிணைந்து விமான ஒழுங்குமுறை மற்றும் ஒருங்கிணைப்புக்கான சிக்காகோ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதன் பிரதிபலனாக, சர்வதேச விமானச் சேவைகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதியன்று, இலங்கையும் அவ்வமைப்பின் உறுப்பினரானது. தற்போது அவ்வமைப்பில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

1912ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதியன்று, விமானப் போக்குவரத்து வரலாற்றில் புதிய பரிமாணத்தைச் சேர்த்து, முதலாவது உள்நாட்டு விமானப் பயணம் கொழும்பு பந்தய மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பரில் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் கொண்டாடப்படுகிறது.

நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, நிறுவன ஊழியர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடிய பின்னர், சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான கண்டுபிடிப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்களான ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, எஸ்.ஹெட்டிஆரச்சி, இராஜாங்கச் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த, விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.ஏ.சந்திரசிறி, ஸ்ரீ லங்கன் விமானச் சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே ஆகியோரும் அதிகார சபையின் ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

'சர்வதேச சிவில் விமான சேவைகள் தினம்'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version