கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து நேற்றிரவு (23/12) 7.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மயிலவௌ – புபுதுபுர பகுதியைச் சேர்ந்த 28 வயதான சிவில் பாதுகாப்பு படை வீரரான எஸ். சமரநாயக்க என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் வயலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது பிரதான வீதியின் ஊடாக யானை குறுக்கே வந்தமையால், யானையுடன் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த இளைஞர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(திருகோணமலை நிருபர்)