வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 98 உயர்தர பிரிவினரின் ஏற்பாட்டில், விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்காக இரண்டு திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.
பாடசாலையின் அதிபர் திரு.ஆ லோகேஸ்வரனின் தலைமையில் வைபவ ரீதியாக, இரு திறன் அறைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை (21/12) அன்று திறந்து வைக்கப்பட்டன.
இரு திறன் வகுப்பறைகளும் 98 உயர்தர மாணவர் பிரிவினரால், தலா ஏழரை இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 15 இலட்சம் ரூபாய் நிதி பங்களிப்பின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த இந்த திறன் வகுப்பறை செயற்றிட்டமானது, பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்களான அமரர்.திரு. சிவதாசன் மற்றும் அமரர் திரு.நரேந்திரன் ஆகியோரின் பெயரிலும், 98 உயர்தர மாணவர் பிரிவின் முக்கிய பங்காளரான அமரர்.திரு.ஜெகான் தர்மேந்திராவினதும் நினைவாக அமைக்கப்பட்டு மாணவர்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, அமரர்.திரு. சிவதாசன் ஆசிரியரின் பாரியார் திருமதி.புனிதவதி சிவதாசன் மற்றும் அமரர். திரு.நரேந்திரன் ஆசிரியர் அவர்களின் குடும்பத்தின் சார்பாக திரு.ஐ.கதிர்காமசேகரன் (ஓய்வுநிலை) ஆசிரியரினால் ஒரு வகுப்பறையும், அமைப்பின் முக்கிய பங்காளர் அமரர்.திரு.ஜெகான் தர்மேந்திராவின் சகோதரி திருமதி. யசோ முகுந்தனினால் ஒரு வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டது.