‘தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் காவி பயங்கரவாதி’ – மனோ MP

நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு நியமித்த அதே ஜனாதிபதி தான், அமைச்சர் அலி சப்ரியையும் அமைச்சரவை அமைச்சராக நியமித்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து? என மனோ எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுதொடர்பில் தொடர்ந்தும் கூறிய மனோ எம்.பி, எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்லமாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு.

அமைச்சர்கள் அலி சப்ரி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது. இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது. இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது.

ஆகவே, இவரது செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கிறேன். அதேபோல், இவரது வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, இந்த செயலணியில் இருக்கும் தமிழ் – முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லாவிட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும்’ மனோ எம்.பி மேலும் சாடினார்.

'தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் காவி பயங்கரவாதி' - மனோ MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version