எந்தவொரு கூட்டணிக் கட்சியும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினால், பாராளுமன்றத்தில் அதன் எண்ணிக்கையை நிரப்புவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (26/12) படகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. யார் வேண்டுமானாலும் வெளியேறலாம். நாங்கள் யாரையும் தடுக்கப் போவதில்லை, ஏனென்றால் எதிர்க்கட்சியிடமிருந்து தேவையான எண்ணிக்கையை விட அதிகமான எம்.பிக்களை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
கூட்டணி கட்சியான எம்.பிக்களின் விலகல்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் தரப்பில் பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இந்த அரசாங்கத்தை கட்டியெழுப்ப எமக்கு உறுதுணையாக இருந்த மைத்திரி கட்சி எம்.பிக்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்கள் வெளியேறுவதால் அரசாங்கம் கவிழும் என்று அர்த்தமல்ல.
அரசாங்கம் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது. அத்துடன், எதிர்க்கட்சியிடமிருந்து நமக்குத் தேவைப்படும் எந்த நேரத்திலும் போதுமான எம்.பிக்களை வரவழைத்துக்கொள்ள முடியுமாக உள்ளது. எங்களின் உத்தி என்னவென்றால், எங்களின் தற்போதைய அமைப்பை முழுவதுமாக வைத்திருக்க எம்.பிக்களின் எண்ணிக்கையை நிரப்ப ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவது தான்’, என அமைச்சர் கூறினார்.