இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்பட வேண்டும் – தமிழக முதலமைச்சர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியலாய்வு விபரங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறையினால் கங்கை கொண்ட சோழபுரம், சிவகளை, கொற்கை, மயிலாடும்பாறை, கொடுமணல் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் எனவும் சிவகளைப் பறம்பு முதுமக்கள் தாளியிலுள்ள நெல் கி.மு 1155 காலப்பகுதிக்குரியது எனவும் ஆய்வறிக்கை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். சிவகளையில் நடந்த முதற்கட்ட அகழ்வாய்வில் ‘ஆதன்’ என்ற தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடு கிடைத்ததாகவும் சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினர் இரும்புக் காலத்தில் மேன்மை பெற்று விளங்கியதாகவும் அறிய முடிகிறதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தாமிரபரணி நாகரிகத்தை காட்சிப்படுத்த பொருநை அருங்காட்சியகம் அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதலமைச்சர் இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்பட வேண்டும் - தமிழக முதலமைச்சர்.
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version