இலங்கையின் சிறந்த நூலகமாக தேசிய நூலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட சுன்னாகம் பிரதேச சபை நூலகம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இரண்டாமிடத்தை வத்தளை பிரதேச சபை நூலகமும் மூன்றாமிடத்தைப் யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை நூலகமும் பெற்றுக் கொண்டது.
இதுதொடர்பில் சுரேன் ராகவன் கருத்து தெரிவிக்கையில், நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புத்தக வாசிப்பு வீதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், சமூகத்தில் வாசிப்பை அதிகரிக்க வேண்டிய கடமை பிரதேச நூலகங்களுக்கே காணப்படுவதையும் பிரதேச சபைகள் அதற்கான செயற்றிட்டங்களை முன்மொழிந்து செயலாற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவில் தேசிய நூலகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் அனுசரணையில், வடமாகாணத்தில் 100 நூலகங்களை அமைப்பதற்கான திட்டம் தொடர்பில் இதன்போது கருத்துத் தெரிவித்த கலாநிதி சுரேன் ராகவன், யாழ் பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியை நினைவுகூரும் வகையில் யாழ் பொதுசன நூலகம் எரியூட்டப்பட்ட தினத்திலேயே இச்செயற்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேசிய நூலகத்தின் தலைவரை இதன்போது கேட்டுக் கொண்டார்.
அவர் தனது 2022ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியின் ஊடாக ஒரு மில்லிய ரூபாவை வவுனியா நகரசபை நூலகத்தின் அபிவிருத்திக்கு தேசிய நூலகத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இதன்போது அவர் உறுதியளித்தார்.