இலங்கை – இந்திய கூட்டு அபிவிருத்திக்கான புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கான குறித்த ஒப்பந்தம் எதிர்வரும் ஒரு வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (04/01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.
முந்திய செய்தி
இந்தியாவின் கட்டுபாட்டின் கீழிருந்த எண்ணெய் களஞ்சிய பண்ணையை மீண்டும் இலங்கையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றியாகுமென, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று (03/01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் பற்றிய இந்தியாவுடனான கூட்டு அபிவிருத்தி ஒப்பந்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் அதுதொடர்பில் விளக்கமளிக்கையில், ‘வரலாற்றில் முதற்றடவையாக இலங்கை எண்ணெய் தாங்கிகள் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் திருகோணமலை எண்ணெய் களஞ்சிய பண்ணையை இந்தியாவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள கூட்டு அபிவிருத்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் நேரடி கட்டுபாட்டின் கீழ், 24 எண்ணெய் தாங்கிகளும், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் அதன் துணை நிறுவனத்தின் கட்டுபாட்டின் கீழ் 61 எண்ணெய் தாங்கிகளும் என மொத்தமாக 85 எண்ணெய் தாங்கிகள் இலங்கையின் நேரடி கட்டுபாட்டின் கீழிருக்கும்.
அந்தவகையில் இந்தியாவின் முழுமையான கட்டுபாட்டின் கீழிருந்த திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கையின் கட்டுபாட்டுக்குள் மீண்டும் கொண்டு வந்துள்ளமை எமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
அத்துடன் கடந்த 2016ஆம் ஆண்டு திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் பண்ணைக்குச் சென்றிருந்த எமது அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் தடுத்து வைத்து கைது செய்திருந்தனர். இந்த சம்பவம் இராஜதந்திர மட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்டிருந்த எமது அதிகாரிகளின் மூலமாகவே இம்மாதம் 12ஆம் திகதி, திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் பண்ணையில் இலங்கை கொடி பறக்கவிடப்படும்’ என அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
