அமைச்சர்களின் பதவி நீக்கம் ஆரம்பம்

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து உடன் அமுலாகும் வகையில், சுசில் பிரேமஜயந்த எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக தமது மாற்றுக் கருத்துக்களை முதன் முறையாக தொடர்ச்சியாக முன்வைத்து வந்த சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றிற்கு தெரிவாகிய சுசில் பிரேமஜயந்த, 2004 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

கடந்த காலத்தில் சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கத்தின் கீழ் 2004 தொடக்கம் 2005 வரை வலுசக்தி அமைச்சராகவும் பதவி வகித்த இவர், மஹிந்த அரசாங்கத்தில் கல்வியமைச்சராகவும் 2010 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில் பெற்றோலிய வளத்துறை அமைச்சராகவும் மிக முக்கிய அமைச்சு பதவிகளை வகித்து வந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த மைத்திரி அரசாங்கத்தில் சுசில் பிரேமஜயந்த, 2015 தொடக்கம் 2018 வரை தொழிநுட்ப அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

இவற்றை தொடர்ந்து, தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைநோக்கு கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

எனினும் அவரை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சர்களின் பதவி நீக்கம் ஆரம்பம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version