‘இயற்கை துறைமுக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வேன்’

திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

நேற்று (04/01) திருகோணமலை இயற்கை துறைமுகத்தினை பார்வையிடுவதற்காக வருகை தந்தபோதே அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கொவிட் – 19 சூழலில் நாடு பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து இருந்தாலும், அரசாங்கம் இவ்வாறான நெருக்கடியான சூழலிலும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களில் தற்பொழுது கப்பல் போக்குவரத்து துறைமுக அபிவிருத்தியையும் ஆரம்பித்துள்ளது.

அந்த அடிப்படையில் உலகில் பிரசித்திபெற்ற துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலை இயற்கை துறைமுகம் காணப்படுகின்றது.

அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்கின்ற நடவடிக்கைகளில் கூடுதலான கவனத்தை செலுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில், திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதனால், இது தொடர்பாக நாங்களும் எங்களுடைய கோரிக்கைகளை இந்தப் பகுதி மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் கப்பல் மற்றும் துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேவர்தனவின் சகல முயற்சிகளிலும் பங்கெடுத்துள்ளோம்.

அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் இவ்வாறான வீதி அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்திகள் என பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முக்கிய கோரிக்கைகளாக வீதி அபிவிருத்தி மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற விடயங்கள் காணப்படுகின்றன.

இதனால் நாட்டில் ஏற்படுகின்ற வேலையில்லா பிரச்சினைகளுக்கும் பாரிய ஒரு தீர்வு எட்டப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

(திருகோணமலை நிருபர்)

'இயற்கை துறைமுக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வேன்'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version