இலங்கையில் கிடைக்கப்பெற்ற உலகின் மிகப்பெரிய ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள நீல மாணிக்கல் கொத்தை, 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாய் நிறுவனத்துடன், இறுதி ஒப்பந்தம் செய்வது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டுபாய்க்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதுதொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அமைச்சரின் கருத்துப்படி, இதுவரை ஆசியாவின் ராணியை விற்பனை செய்வதற்கான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அதேவேளை, அதனை இன்னும் அதிக விலைக்கு ஏலம் விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் லொஹான் ரத்வத்தே மேலும் கூறினார்.
கடந்த வருட இறுதி பகுதியில் ஹொரணையில் உள்ள தனியார் காணியொன்றில் கண்டெடுக்கப்பட்ட இந்த மாணிக்கக்கல் கொத்தானது, கடந்த டிசம்பர் மாதம் உரிமையாளரின் வீட்டில் காட்சியப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், உள்ளூர் வியாபாரிகள் அதனை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விலைக் கோரியிருந்த போதும், அதன் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாகுமென பிரான்ஸில் உள்ள இரத்தினக்கல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்திருந்ததாக, குறித்த மாணிக்கக்கல் கொத்தின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.