குழப்படி மும்மூர்த்திகளின் தடை நீக்கமும், இலங்கை கிரிக்கெட் எதிர்காலமும்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான குஷல் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல, தனுஷ்க குணதிலக ஆகியோர் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடையினை இலங்கை கிரிக்கெட் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று(07.12) நீக்கியுள்ளது.

மூன்று வீரர்களும் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவின் போது கொரோனா தனிமைப்படுத்தல் அணி முகாமைத்துவ விதியினை மீறி தங்குமிடத்திற்கு வெளியே சென்ற குற்றச்சாட்டினை மூவரும் ஏற்றுக்கொண்டதனால், ஆறு மாத காலத்திற்க்கான உள்ளூர் போட்டிகளுக்கான தடையும், ஒரு
வருட காலத்துக்கான சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளுக்கான தடையும் விதிக்கப்பட்டன.

லங்கா பிரீமியர் லீக் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, மூவருக்குமான உள்ளூர் போட்டி தடை நீக்கப்பட்டது. தற்சமயம் ஆறுமாத காலப்பகுதிக்குள் சர்வதேச தடையும் நீக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று வீரர்களும் தடையினை நீக்குமாறு இலங்கை கிரிக்கெட்டிடம் கோரியதாகவும், மனநல வைத்தியர் அவர்களது தொடர்ச்சியான ஆலோசனை நிகழ்ச்சி திட்டத்தை செயற்படுத்தி வருவதாக சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக தடையினை நீக்கியுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
.
சிம்பாவே தொடருக்கான அணியில் அவர்களை இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் பூரண உடற் தகுதியினை பெற்றிருந்தால், தெரிவுக்குழுவினர் அவர்களை இலங்கை அணியில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் உளளதாகவும் இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மூவரதும் தடைகள் நீக்கபப்ட்டுள்ள போதும், தடை செய்யப்பட்ட நாளிலிருந்தான இரன்டு வருட காலப்பகுதிக்குள் மீண்டும் ஏதும் ஒழுக்காற்று பிரச்சினையில் சிக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மூன்று வீரர்களும் லங்கா பிரிமியர் லீக் தொடரில் பிரகாசித்துள்ளமை, இவர்களது தடை நீக்கத்துக்கான முக்கிய காரணமாக கருதலாம். ஆனாலும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தடை செய்யப்பட்டு இரண்டு மாதங்களிலேயே இவர்களது தடை நீக்கம் தொடர்பில் பேச்சுக்கள் எழுந்துவிட்டன.

மஹேல ஜெயவர்தன அணியினை ஆலோசிக்க பயிற்றுவிப்பாளராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா? அணியினை மீள கட்டியெழுப்பும் ஆரம்ப கட்டத்திலேயே இவர்கள் அணிக்குள் இருந்தால் சிறந்த அணியாக இலங்கை அணியினை உருவாக்க முடியுனென்ற நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கும் வரலாம்.

இந்து மூவரையும் உள்ளெடுப்பதனால் தற்பதையே வீரர்கள் குழப்படமடைகிறார்களா என்ற கேள்வியும் எழாமலில்லை. அதன் காரணமாகத்தான் பானுக்க ராஜபக்ச ஓய்வை அறிவித்தாரா? அப்படியானால் பானுக்கவின் முடிவு தவறானது. வீரர்கள், வீரர்கள் தொடர்பான பிரச்சனைகளை பார்ப்பது முகாமைத்துவ விடயம். அதனை அதற்குரியவர்கள் பார்க்க, வீரர்கள் தங்கள் திறமைகளை காட்ட வேண்டியது தான் வீரர்களது வேலை.

ஒரு வருடத்துக்கு முன்னரான தடை நீக்கம் தேவைதானா? ஏன் இந்த அவசரம்? சிம்பாவே தொடருக்குள் இந்த வீரர்களை உள்ளெடுப்பதன் மூலமாக அவர்களுக்கு நம்பிக்கையினையும், அணியனையும் சரியாக உருவாக்க முடியும். அடுத்த தொடர்கள் இலங்கை அணிக்கு மிகவும் சவாலான தொடர்கள்.
இலங்கை அணி அவுஸ்திரேலியா செல்கிறது.அதன் பின்னர் இந்தியா செல்கிறது. சரியான வீரர்கள் தேவை. சரியான நல்ல ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட அணி தேவை. அவ்வாறான நிலையில் இந்த வீரர்களை தற்போதே தயார் செய்வது நல்ல விடயமே.

இவர்கள் இல்லாத காலத்தில், இவர்கள் அணிக்குள் மீண்டும் வர முடியாத அளவிற்கு வேறு வீரர்கள் திறமையினை காட்டவில்லை. ஆகவே அவர்கள் அணிக்குள் மீண்டும் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த வீரர்கள் இல்லாவிட்டால், இலங்கை அணி நன்றாக வந்துவிடுமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனாலும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இந்த மூன்று வீரர்களும் மீள் வருகையினை காட்டிய விதம், குறிப்பாக தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ் ஆகியோர் துடுப்பாடிய விதம் இவர்கள் மீண்டும் அணிக்குள் தேவை என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.

இந்த வீரர்களை சரியான இடத்துக்குள் நிலை நிறுத்தி தற்போது உருவாகிவரும் அணியோடு அவர்களுக்கு நல்ல இணைப்பை உருவாக்கினால் இவர்கள் இலங்கையின் மிக முக்கியமான கிரிக்கெட் வீரர்களாக உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. அதனை இந்த வீரர்களும் சரியான முறையில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மஹேல ஜெயவர்த்தனவின் பயிற்றுவிப்பில் இந்த வீரர்களும், இந்த இலங்கை அணியும் அடுத்த கட்டத்தை நோக்கி உயர வேண்டும். மஹேல தூர நோக்கான இலக்குகளை கொண்டவர். இந்தியா அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி வேண்டாமென தூக்கி எறிந்து விட்டு இலங்கை அணியினை பொறுப்பெடுத்துளார்.
இனி அவரை எவ்வாறு வீரர்களும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் பாவிக்கப்போகிறது என்பதிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி, தோல்வி தங்கியுள்ளது.

குழப்படி மும்மூர்த்திகளின் தடை நீக்கமும், இலங்கை கிரிக்கெட் எதிர்காலமும்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version