இன்று இடம்பெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் அக்கிராசன உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பயங்கரவாத தடைச் சட்டத்தை காலத்துக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து தெரிவித்தார்.
அவ்வுரையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தை காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க நாம் தயாராக இருக்கிறோம். அத்துடன் சர்வதேசத்தின் பரிந்துரைகளுக்குப் பதிலளிக்கவும் நாடு தயாராக உள்ளது. தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடைய வழக்கில் நீண்ட காலமாக சிறையிலிருந்த கைதிகள் பலரையும் விடுவிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.
மேலும் சகல நாடுகளுடனும் நட்புணர்வுடன் செயற்படுதல் அவசியமான ஒன்றாகும். மாணவர்களுக்கு நல்ல கல்வி, இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு, வீடமைப்பு வசதிகள், சுயதொழில் வேலைத் திட்டங்கள் என்பன பாரபட்சமின்றி ஒவ்வொருவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது ஆட்சியில் நீதித்துறையும் சுயாதீனமாக செயற்பட்டது. நீதிமன்ற வளாகங்களும் புதுப்பிக்கப்பட்டன. அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நீதியரசர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதேவேளை, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகளும் தாமதமின்றி விரைவாக நடாத்தப்பட்டன” என்றும் கூறினார்.
முந்திய செய்தி
ஜனாதிபதியினால் அரசின் புதிய ஆண்டுக்கான அரசின் புதிய கொள்கை பிரகடன உரை முன்வைக்கப்பட்டது.
அதில், ‘புதிய 2022ஆம் ஆண்டானது, நாட்டு மக்கள் அணைவருக்கும் சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டும் என்றும் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாட்டு மக்களுக்குப் பொறுப்படையவர்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, “நாடு முகங்கொடுத்துள்ள சவால்களுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
கொவிட் பெருந்தொற்று காரணமாக நாடு பாரிய பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. ஆடைத் தொழில் துறை, சுற்றுலாத்துறை, பெருந்தோட்டத்துறைகள் என்பன வீழ்ச்சி கண்டன. அத்துடன் பொதுமக்களின் சாதாரண வாழ்க்கையிலும் நாளாந்த செலவுகள் அதிகரித்தமையால் சிக்கல் நிலைமை உருவானது.
எனினும் மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் நாம் முன்னின்று செயற்பட்டோம். கொவிட் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிதி நிவாரணங்களை வழங்கினோம். மிக முக்கியமாக எந்தவொரு அரச ஊழியர்களினதும் சம்பளத்தை வழங்காமல் இடைநிறுத்தவில்லை.
இதேவேளை, வடக்கு – கிழக்கு பகுதிகளில் ஏராளமான காணிகளை விடுவித்துள்ளோம். இனிவரும் காலங்களிலும் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கு – கிழக்கில் உள்ள மக்களிள் அபிவிருத்திகளுக்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அப்பிரதேசங்களுக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
எனது ஆட்சியில் மனித உரிமை மீறலுக்கு இடமில்லை. அந்தவகையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தார்.
முந்திய செய்தி
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று (18/01) வைபவ ரீதியாக சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையுடன் ஆரம்பமானது.
ஜனாதிபதின் வருகைக்கு முன்னராக முற்பகல் 9 மணியளவில் பாராளுமன்ற வளாக கட்டடத்தில் கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து, சபா நாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் ஜனாதபதியையும் அவரது பாரியாரையும் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.