மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (17/01) பதிவான இரு பாரிய நில நடுக்கங்களின் காரணமாக குறைந்தது 26 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேல் மாகாணமான பட்கிஸில் உள்ள காதிஸ் மாவட்டத்தில் முதலில் 5.3 ரிச்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியிருந்ததை தொடர்ந்து, முதல் நில நடுக்கம் ஏற்பட்டு 2 மணித்தியாலங்கள் கழித்து 4.9 ரிச்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் வீடுகள், கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்குள் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுவரை 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.