பாராளுமன்ற அமர்வின் சம்பிரதாய அங்குரார்ப்பண விழாவிற்கு இன்று (18/01) நடனம் ஆட வருகை தந்திருந்த நடனக் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கும், பாராளுமன்ற ஊழியர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட நடனக் கலைஞர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், குழுவில் உள்ள மற்றவர்கள் விழாவின் போது நடனமாட அனுமதிக்கப்பட்டதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்த நிலையில், பாராளுமன்றத்தின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் நடனக் கலைஞர் ஒருவருக்கு தொற்று உறுதியானதை உறுதிப்படுத்தினார். ஆனால் பாராளுமன்ற ஊழியருக்கு தொற்று உறுதியானமை தொடர்பில் உறுதியான தகவலை அவர் வெளியிடவில்லை.
எனினும் குறிப்பிட்ட நடனக் கலைஞர், குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் வருகை தராது, தனியாகவே பாராளுமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ உறுதியப்படுத்தியதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.