இலங்கையின் பொருளாதார சிக்கல் நிலையினை மீட்பதற்கான பொருளாதார அறிக்கையினை இன்று ஐக்கிய மக்கள் சகதியின் பாரளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் முன்வைத்தார். பாராளுமன்றத்தில் பொருளாதார அறிக்கையினை முன் வைத்து அனைத்து கட்சி தலைவர்களது ஆதரவினையும் அவர் கோரியுள்ள அதேவேளை அனைத்து கட்சி அரசாங்கத்திடம் இந்த திட்டத்தை கடைபிடிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொருளாதாரத்தை புதுப்பிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் ஒரு பொருளாதார திட்டத்தை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹர்ஷ, பொருளாதார நிபுணர்கள், அறிஞர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரிடம் ஆலோசனை பெற்று இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறியுள்ளார்.
ஏனையவர்களினால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் தற்காலிக அளவீட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை எனவும், தான் முன்வைத்துள்ள திட்டத்தின் கீழ் இலங்கையை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியுமெனவும், அதன் பின்னர் தேர்தலை நடாத்த முடியும் எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார்.
தற்போதைய திட்டத்தின் கீழ் 30-40 அமைச்சு பதவிகள் வழங்கப்படலாமெனவும், நாட்டை முன்னேற்றுவதற்கான சரியான திட்டங்கள் இருப்பதாக தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ள ஹர்ஷ டி சில்வா, அமைச்சு பதவியினை ஏற்குமாறு தனக்கு அழைப்பு வந்ததாகவும், அமைச்சு பதவியினை ஏற்பதனால் நாட்டின் பிரச்சினை தீர்ந்துவிடாது என மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழலுக்கு, குறைந்த அமைச்சார்களுடன், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் இணைந்த அமைச்சரவை ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு செயற்படுவதே சிறந்தது என்ற கருத்தையும் அவர் முன் வைத்துள்ளார்.
