அரசாங்கம் அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது!

அரசாங்கத்திற்கு அஸ்வெசும திட்டம் சரியாக நடந்தாலும் ஒன்றுதான், நடக்காவிட்டாலும் ஒன்றுதான். அவர்கள் தேர்தலுக்கே தயாராகி வருகின்றனர் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்தினால் அசௌகரியங்களுக்கு உள்ளான கிராம உத்தியோகத்தர்களுடன் இன்று (30.08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் முழுக்க முழுக்க குழப்பமான அரசாகவே உள்ளதாது. எவ்வாறு சரியாகச் செயற்படுவது என்பது புரியவில்லை. அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு முறையான வேலைத்திட்டம் இல்லாவிட்டாலும் அடுத்த தேர்தலுக்கான பணிகளை இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள் என அவர் விமர்சித்துள்ளார்.

இதெல்லாம் அரசியல் சூதாட்டமே என்றபடியால் இதை நிறுத்த வேண்டும் என்றும்,இந்தப் பொய்,மோசடி கொடுக்கல் வாங்கல்கள் போன்றவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும்,இது இல்லாமல் வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா நிலைமை மற்றும் வங்குரோத்து நிலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி முதலில் சரியான மக்கள்தொகை,குடும்ப வருமான செலவின கணக்கெடுப்பைச் செய்து வறுமைக் கோடு துல்லியமாக அடையாளம் காணப்பட்டு, பயனாளிகள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டிருப்பதையே செய்திருக்க வேண்டும். அஸ்வெசும திட்டம் அத்தகைய முறையான கணக்கெடுப்புடன் ஆரம்பிக்கப்படவில்லை. வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போதே அரசாங்கம் கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்கள துறையால் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை LIRNE asia நிறுவகம் நடத்தியதில் இந்நாட்டில் ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான கணக்கெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களமும் உறங்கும் கொள்கையையே பின்பற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மருந்துப் பற்றாக்குறை, வைத்தியசாலைகளில் மருந்தினால் உயிரிழக்கும் மக்கள்,நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள், சுகாதார அமைச்சரின் மனிதாபிமானமற்ற பேச்சு என சுகாதாரத் துறையில் பல பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுகின்றன என்றும், இந்நிலையைப் பார்க்கும் போது இந்த அரசாங்கத்திற்கு வெட்கமில்லை என்றே தோன்றுவதாவும்,அஸ்வெசும திட்டம் கூட ஆரம்பத்தில் இருந்தே தவறாகவே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் குளறுபடியாக உள்ளன என்றும்,ஜன சவிய அமுல்படுத்தப்பட்ட காலத்திலும் அது முறையாக மேற்கொள்ளப்பட்டாலும், இப்போது நாட்டின் பணத்தை வீணடிக்கும் செயலாக இவை மாறியுள்ளதாகவும், இந்த விடயத்தில் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும்,நாட்டையே குழப்பும் இந்த குழம்பிப்போயுள்ள அரசாங்கம் அஸ்வெசும திட்டத்தைக் கூட குழப்பிக்கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதாக கூறுவது கேலிக்கூத்தானது என்றும்,அவர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், உண்மையில் அஸ்வெசும திட்டத்தால் கண்மூடி வித்தையே நடப்பதாகவும், இந்த கண்மூடித்தனத்தை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுனாமி,கொவிட் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது கிராம உத்தியோகத்தர்கள் கிராமிய மட்டத்தில் சிறந்த சேவையை ஆற்றினார்கள் என்றும்,அதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply