வெற்றியோடு உலககிண்ணத்தை நிறைவு செய்தது இலங்கை

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியினை வெற்றி பெற்றதோடு உலககிண்ண 20-20 தொடரை நிறைவு செய்துள்ளது. வெற்றி பெறவேண்டிய இரண்டு போட்டிகளில் தோல்வியினை சந்தித்தமையினால் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது.


உலக கிண்ண தொடரில் இந்தளவு சிறப்பாக விளையாடுவார்கள் என யாரும் நம்பாத நிலையில் மீண்டும் இலங்கை அணி மீது நம்பிக்கை வைக்குமளவுக்கு சிறப்பான அணி ஒன்று உருவாக்கியுள்ளது. நல்ல முறையில் போராடி உலக கிண்ண தொடரை நிறைவு செய்துள்ளார்கள்.

உலக கிண்ணத்தில் இருந்து வெளியேறும் போது தொடரில் கூடுதலான ஓட்டங்களை பெற்ற முதல் இரண்டு துடுப்பாட்ட வீரர்களாக சரித் அசலங்க, பத்தும் நிசங்க ஆகியோர் முதலிரு இடங்களை பெற்றுள்ளனர். ஆனால் இது முதல் சுற்று போட்டிகளோடு இணைந்த பெறுதிகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. பந்துவீச்சில் வனிது ஹசரங்க இரண்டாம் சுற்றில் கூடுதலான விக்கெட்களை பெற்றவர் வரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு பக்கமாக சிறப்பாக விளையாடி வெற்றியினை இலங்கை அணி பெற்றுக் கொண்டது. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் அபாரமான களத்தடுப்பு வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

190 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
இதில் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 81 (54)ஓட்டங்களையும், நிக்லொஸ் பூரான் 46(34) ஓட்டங்களையும், பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ, சமிக்க கருணாரட்ன, வனிது ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், டுஸ்மாந்த சமீர, டஸூன் சாணக்க ஆகியோர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.

இதில் பத்தும் நிசங்க 51(41) ஓட்டங்களையும் , சரித் அசலங்க 68 (41) ஓட்டங்களையும் பெற்றனர். இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 91 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். குசல் பெரேரா 29(21) ஓட்டங்களையும், டஸூன் சாணக்க ஆட்டமிழக்காமல் 25 (14) ஓட்டங்களையும் பெற்றனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முன்னதாக, உலகக்கிண்ண 20-20 தொடரில் இன்றைய முதற் போட்டியாக அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதில் ஷமிம் ஹொசெய்ன் 19(18) ஓட்டங்களையும், மொஹமட் நைம் 17(16) ஓட்டங்களையும், மமதுல்லா 16(18) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அடம் ஷம்பா 5 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும், ஜோஷ் ஹசெல்வூட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்றது. இதில் ஆரூண் பிஞ் 40(20) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் டஸ்கின் அஹ்மத், ஷொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள். பங்களாதேஷ் அணி 5 போட்டிகளிலுமே தோல்வியடைந்த நிலையில் உலக கிண்ண தொடரை மிகவும் மோசமாக நிறைவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா அணி தனக்கான அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துளளது.

இந்த போட்டியின் நாயகனாக அடம் ஷம்பா தெரிவு செய்யப்பட்டார்.

வெற்றியோடு உலககிண்ணத்தை நிறைவு செய்தது இலங்கை

Social Share

Leave a Reply