வவுனியா காற்பந்து சங்க தலைவர் நாகராஜன், தான் காற்பந்து போட்டிகளில் விளையாடியதாக போலியான சான்றிதழ்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதனை வவுனியா பிரதேச செயலகம் உறுதி செய்துள்ளது.
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன முன்னாள் தலைவர், பெல்ஹாகவலை காற்பந்து சங்க தலைவர் அனுர டி சில்வாவின் கோரிக்கைக்கு அமைய வவுனியா பிரேதச செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் உறுதி செய்யபப்ட்டுள்ளது.
அதன்படி வேறு ஒரு வீரருக்கு வழங்கிய சான்றிதழை பெயர் மாற்றம் செய்துள்ளாதாகவும், அதேவேளை, கிராம சேவையாளர் பிரிவு மற்றும் கழகத்தின் பெயரையும் மாற்றம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“2018 ஆம் ஆண்டு விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட காற்பந்தாட்ட போட்டியில், நாகராஜன், வைரவர் புள்ளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவு அணிக்காக விளையாடியதாக 7057 ஆம் இலக்க சான்றிதழை வழங்கியுள்ளார். இருப்பினும் வெற்றி பெற்றது பட்டாணிச்சூர் புளியங்குளம் கிராமசேவையாளர் பிரிவு. 7057 ஆம் இலக்க சான்றிதழ் ஜே.எம் ஜாயிஸ் என்பவருடையது.
2016 ஆம் ஆண்டு தான் அல் ஹிஜிரா அணிக்காக விளையாடி வெற்றி பெற்ற அணியில் இடம் பிடித்திருந்தமைக்காகன 6293 ஆம் இலக்க சான்றிதழை வழங்கியுள்ளார். ஆனால் அந்த போட்டியில் 786(செவன், எயிட், சிக்ஸ்) எனும் அணி வெற்றி பெற்றுள்ளதோடு 6293 எனும் இலக்கமுள்ள சான்றிதழ் ஜே.எம் ஜாயிஸ் என்பவருடையது.
அதேவருடம் நடைபெற்ற மாவட்ட மட்டப்போட்டியில் வவுனியா பிரதேசசெயலகம் முதலாம் இடத்தை பிடித்ததாகவும், அதில் நாகராஜன் விளையாடியதாவும் வழங்கப்பட்ட 315 ஆம் இலக்க சான்றிதழ் S.M சல்மான் எனும் நபருடையது.” என்பதனை பிரதேச செயலகம் வழங்கிய கடிதத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற வவுனியா பிரதேச செயலக மற்றும் வவுனியா வெண்கலசெட்டிகுளம் அணிகளுக்கிடையிலான போட்டியில் விருந்தினராக பங்குபற்றிய அப்போதைய விளையாட்டு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தனுராஜ், நாகராஜன் அந்தப் போட்டியில் பங்குப்பற்றவில்லை என்பதனை வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை காற்பந்து சம்மேளன தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ள ஆவணங்களிலேயே இந்த மோசடி செய்யப்பட்டுளளதாகவும், இதனை காற்பந்து சங்க தேர்தல் குழுவிற்கு தெரிவித்த போது தமக்கு இதனை பரிசோதனை செய்ய நேரம் போதாது என தெரிவித்ததாகவும், அதன் பின்னர் தான் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவில் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாகும் இலங்கை காற்பந்து சம்மேளன தலைவர் அனுர டி சில்வா நேற்று(13.09) ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆவண மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா மாவட்ட விளையாட்டு அதிகாரி அமலனை வி மீடியா தொடர்பு கொண்டு கேட்ட பொது “நாகராஜன் போட்டிகளில் விளையாடவில்லை. வேறுநபர்களின் சான்றிதழ்களை பாவித்துள்ளார். அதனை உறுதி செய்து நாம் வழங்கியுள்ளோம். சான்றிதழ்களை நாம் வழங்கிய பின்னர் அதனை பாதுகாப்பது மற்றும் அதனை மோசடிகளுக்கு வழங்குவது சான்றிதழுக்குரியவரின் பொறுப்பு என கூறிய அதேவேளை, தாம் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால் விசாரணைகள் நடைபெற்றால் சான்றிதழுக்குரியவர் விசாரணைக்கு செல்லவேண்டிய சூழ் நிலை உருவாகும். அவரும் இந்த மோசடியில் ஈடுப்பட்டமை நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது” எனவும் தெரிவித்தார்.
நாகராஜன் வவுனியா காற்பந்தாட்ட சம்மேளன தலைவராக கடந்த சில வருடங்களாக கடமையாற்றி வரும் அதேவேளை, இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் கடந்த நிர்வாக சபையில் உப பொருளாராக கடமமையாற்றியிருந்தார். அத்தோடு இம்முறை காற்பந்தாட்ட தேர்தலில் ஜஸ்வர் தலைமையிலான குழுவில் போட்டியிடுவதாகவும் அறிய முடிகிறது.
இந்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட நபரான நாகராஜனை வி மீடியா சார்பாக நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது “இது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதனால் தான் எந்த கருத்துக்களையும் கூற முடியாது என தெரிவித்த அதேவேளை, அனுரா டி சில்வா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு போய்யானது எனவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தமது அணி சார்பாக ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” எனவும் கூறினார்.
பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்தின் தமிழாக்கம் கீழுள்ளது
அனுர டி சில்வா
தலைவர்
காற்பந்து
பொல்கஹவெல
இலங்கை காற்பந்து சமேளத்துடன் இணைந்து வவுனியா காற்பந்து லீக்கின் தலைவர் ஏ. நாகராஜனினால் முன்வைக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்கான விண்ணப்ப கடிதம்.
குறித்த விடயம் தொடர்பில் உங்களால் 2023.09.05 நாள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிய கடிதத்துடன் தொடர்புடையது, 02. அதற்கமைய உங்களால் அனுப்பப்பட்ட சான்றிதல்களுக்கு உரிய மாவட்ட மற்றும் பிரதேச விளையாட்டு அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட சான்றிதழ் பட்டியல்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் ஏ. நாகராஜனுடையது அல்ல எனவும், அவை வேறு விளையாட்டு வீரர்களுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது. சான்றிதழ் வழங்கப்படும் பட்டியலுக்கு அமைய சான்றிதழ்களின் உண்மையான உரிமையாளர்களின் விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
(இந்தச் சான்றிதழ்கள் தொடர்பான சான்றிதழ் வழங்கல் கோப்பின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன)
- சான்றிதழ் எண். 7057 திகதி 2018.01.02 – ஜே.எம். இந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள ஜெய்ஸ், வைரவபுளியங்குளம் விளையாட்டுக்கழகம் குறித்த ஆண்டு வெற்றிபெறவில்லை, பட்டாணிவூர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது. (இணைப்பு 01)
- சான்றிதழ் இலக்கம் – 6297, 2016.03.20 ஜே.எம் ஜாயிஸ், இந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அல்ஹீஜ்ரா விளையாட்டு கழகம், குறித்த ஆண்டு வெற்றிபெறவில்லை என்பதுடன், 7 8 6 விளையாட்டு கழகம் வெற்றிபெற்றுள்ளது. (இணைப்பு 02)
- சான்றிதழ் எண். 000315 திகதி 14.05.2016 – எஸ்.எம். சல்மான் (இணைப்பு (03)
- 27.06.2009 திகதியிடப்பட்ட சான்றிதழ் எண். 11536 – எஸ்.எம். சப்ரி (இணைப்பு 04)
- சான்றிதழ் இலக்கம் 01978 திகதி 25.04.2003 – இந்த விளையாட்டுப் போட்டி இளைஞர் சேவை மன்றத்தால் நடத்தப்பட்டதால், மேற்படி சான்றிதழின் நம்பகத்தன்மையை சரிபார்க்க எந்த ஆவணங்களும் மாவட்டச் செயலகத்தில் இல்லை. 03. எனவே, ஏ. நாகராஜன் அவர்கள் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்கள் போலியானவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த விடயம் சம்மந்தப்பட்ட முழுமையான ஆவணங்கள் கீழுள்ளன.