மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) உறுப்பினரொருவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(25.05) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஹிதிஹாமிலகே சமன் குமார எனும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரொருவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், மக்கள விடுதலை முன்னணியின் உறுப்பினர் எனக் கூறப்படும் குறித்த நபர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமன் குமார என்பவர் பொலன்னறுவை மாநகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் வேட்புமனுவினைத் தாக்கல் செய்திருந்ததாக அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரக் கட்சியின் உறுப்பினரொருவரை மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் எனக் கூறி மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.