உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரிந்தவர்களுக்கு நிரந்தர நியமனம்

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக மற்றும் சலுகை அடிப்படையில் பணிபுரிந்த 575 நபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு கண்டியில் இன்று(11.07) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது, 57 உள்ளூராட்சி மன்றங்களில் நீண்ட காலமாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் உரிய நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, ஏனைய வங்குரோத்து அடைந்த நாடுகள் ஓய்வூதியம் வழங்காமை மற்றும் அரச சேவையிலிருந்து பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டமை போன்ற வழிமுறைகளை கையாண்ட போதிலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய நட்பு நாடுகளின் ஆதரவுடன் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி இலங்கை முன்னேறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, ரோஹன திஸாநாயக்க, மத்திய மாகாண சபைத் தலைவர் எல்.டி. நிமலசிறி, மத்திய மாகாண பிரதம செயலாளர் சரத் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், கண்டி மாநகர ஆணையாளர் இந்திக அபேசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 

Social Share

Leave a Reply