LPL: வெற்றிப் பெற்றும், வெளியேறிய தம்புள்ளை அணி 

லங்கா பிரீமியர் லீக் தொடரின் தீர்மானமிக்க போட்டியில் தம்புள்ள சிக்சேர்ஸ் அணி வெற்றியீட்டிய போதும், அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது. அதற்கமைய காலி, யாழ்ப்பாணம், கொழும்பு அணிகளுடன் இறுதியாக கண்டி அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. 

கண்டி, தம்புள்ளை இரு அணிகளும் தரவரிசையில் 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் உள்ள போதும், Net Run Rate புள்ளிகளுக்கு அமைய முன்னிலையிலுள்ள கண்டி அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து கொண்டது. 

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இன்று(16.07) நடைபெற்ற லீக் சுற்றின் இறுதிப் போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும்  தம்புள்ள சிக்சேர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. அடுத்த சுற்றுக்குள் நுழைவதற்கு இந்த போட்டியில் சிறந்த Net Run Rate புள்ளிகளுடன் வெற்றி பெற வேண்டும் எனும் கட்டாயத்தில் தம்புள்ளை அணி களமிறங்கியிருந்தது. 

கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த தம்புள்ளை அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தம்புள்ளை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, 6வது விக்கெட்டுக்காக அணித்தலைவர் நபியுடன் இணைந்த சமிந்து விக்ரம்சிங்கே ஜோடி இணைப்பாட்டமாக 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

நபி 40(33) ஓட்டங்களுக்கும், சமிந்து விக்ரம்சிங்கே 26(29) ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க தம்புள்ளை அணி 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. கொழும்பு அணி சார்பில் பினுர பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும், மதீஷ பத்திரன, டுனித் வெல்லாலஹே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

தம்புள்ளை அணிக்கு, கண்டி அணியை விட அதிகமான Net Run Rate புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கும் கொழும்பு அணியை 47 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கொழும்பு அணியை குறித்த இலக்குக்குள் மட்டுப்படுத்த தவறியமையால், இன்றைய போட்டியில் தம்புள்ளை அணி வெற்றியீட்டிய போதும் தொடரிலிருந்து வெளியேறியது. 

124 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணியின் வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அணித் தலைவர் திசர பெரேரா மாத்திரம் 30(31) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதன்படி, கொழும்பு அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

தம்புள்ளை அணி சார்பில் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுக்களையும்,  சமிந்து விக்ரம்சிங்கே 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன்படி, தம்புள்ளை அணி இன்றைய போட்டியில் 28 ஓட்டங்களுடன் வெற்றியீட்டிய போதும், தொடரிலிருந்து வெளியேறியது. போட்டியின் ஆட்ட நாயகனாக தம்புள்ளை அணித் தலைவர் மொஹமட் நபி தெரிவு செய்யப்பட்டார். 

லங்கா பிரீமியர் லீக் தொடரின் அனைத்து லீக் போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தரவரிசையில் முறையே முதல் 4 இடங்களிலுள்ள காலி, யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 

Social Share

Leave a Reply