இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் இறுதி நாளான இன்று(19.07) இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 325 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள போராடிய இலங்கை அணி 84.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் 2வது இன்னிங்ஸிற்காக மஹித் பெரேரா 61(74) ஓட்டங்களையும், அணித் தலைவர் தினுர கலுப்பஹான 40(75) ஓட்டங்களையும், திசர ஏக்கநாயக்க 39(127) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் பர்ஹான் அஹமட், ஹரி மூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதன்படி, இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட 4 நாள் டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், தொடரை 1-0 என்ற ரீதியில் கைப்பற்றிக் கொண்டது. தொடரின் முதலாவது போட்டி சமநிலையில் நிறைவடைந்திருந்த நிலையில், இலங்கை அணி 2வது போட்டியை தவறவிட்டது.
போட்டியின் முதலாவது இன்னிங்ஸ் விபரம்,
19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும், இறுதியுமான நாள் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து, செல்டென்ஹாமில் கடந்த 16ம் திகதி ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இளையோர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் கயான் வீரசிங்க 77(111) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் நவ்யா சர்மா 5 விக்கெட்டுக்களையும், ஹரி மூர், சார்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர், 1வது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 138.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 477 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் அணித் தலைவர் ஹம்சா ஷேக் 107(211) ஓட்டங்களையும், ராக்கி பின்டோப் 106(181) ஓட்டங்களையும், ஜேடன் டென்லி 91(120) ஓட்டங்களையும், கேஷன பொன்சேகா 76(120) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் விஹாஸ் தெவ்மிக, பிரவீன் மனிஷ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், மனுஜ சன்துக்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் மூன்றாவது நாளின் போது சதம் பெற்ற 16 வயதான ராக்கி பின்டோப், 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி சார்பில் சதம் கடந்த இளைய வீரர் எனும் சாதனையை படைத்தார்.
இலங்கை அணியின் சாருஜன் சண்முகநாதன் முதல் இன்னிங்ஸிற்காக 10(10) ஓட்டங்களையும், 2வது இன்னிங்ஸிற்காக 16(32) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.