இலங்கை, தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய முதற் போட்டியில் பங்களாதேஷ் அணி மலேசியா மகளிர் அணிக்கெதிராக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தமக்கான இரண்டாம் சுற்று வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இலங்கை அணி தாய்லாந்து அணியை வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு உறுதியாகும். மலேசியா அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 20 ஓவர்களில் 02 விக்கெட்ளை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது. இதில் முர்ஷிதா கர்டூன் 80 ஓட்டங்களையும், நிகார் சுல்டானா ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் பெற்றனர். டிலாரா அக்டேர் 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மஹிரா இஸத்தி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய மலேசியா அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை பெற்றது. இதில் எல்ஷா ஹன்டர் 20 ஓட்டங்களையும், வன் ஜூலியா 11 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் நடிக்கா அக்டேர் 2 விக்கெட்களையும், ஜஹன்ரா அலாம், ரிட்டு மோனி, ரபேயா கான், ஷபீகுன் நேஹார் ஜாஸ்மின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.