இனவாத அரசியலை ஒழிக்கத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

இனவாத அரசியலை ஒழிக்கத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

இனவாத அரசியல் மற்றும் ஊழலை ஒழிப்பதென்றால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளியுங்கள் எனத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அப்துல் வாஜித் தெரிவித்தார்.

மன்னார் நகரப் பகுதியில் நேற்று(29.10) தேசிய மக்கள் சக்தியின் 2 காரியாலயங்களைத் திறந்து வைத்த வேளையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நமது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின் இந்த ஒருமாத காலத்தில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றங்கள் நாமெல்லோரும் அறிந்ததே. அதற்கு ஆதரவு நல்கும்முகமாக, அரசியலில் நாம் ஒரு சிரமதானப் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அது எவ்வாறு எனில் கடந்த கால ஊழல்வாதிகளையும் இனவாதிகளையும் காலம் காலமாக நம்மை ஏமாற்றி வந்த அரசியல் கலாச்சாரத்தையும் இல்லாது ஒழித்து ஒரு புதிய மாற்றத்துக்குள் நாம் பயணிக்க வேண்டும்.

மக்களுக்காகச் சேவை ஆற்றுவதற்கு எங்களது வேட்பாளர்களைப் பாராளுமன்றம் அனுப்புங்கள். உங்கள் வாக்குகளை அவர்களுக்கு வழங்கித் தூய்மையான ஒரு அரசியல் செய்ய இளைஞர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் நிஷங்க, வேட்பாளர்களான அன்ரன் கமிலஸ் மற்றும் ராமையா ராதாகிருஸ்ணன் உட்பட கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply