புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் முயற்சி – இந்திய விசாரணை

போலி இந்திய ஆவணங்களை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடைபெறுவதாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் லட்சத்தீவுகள் அருகே ஒரு படகை இந்தியகடலோரக் காவல் படையினர் சோதனை செய்தனர். அதில் துப்பாக்கிகள், தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் படகில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த அவர்கள், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றனர் எனவும் கூறப்பட்டது.

இவர்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சென்னையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உளவுப்பிரிவைச் சேர்ந்த சற்குணம் என்ற சபேசனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

லட்சத்தீவுகள் ஆயுத கடத்தல் சம்பவத்தில் சபேசனுக்கு மிக முக்கிய தொடர்பிருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் லெட்சுமணன் மேரி பிரான்ஸிக் என்ற பெண்ணும் ஒக்டோபர் முதலாம் திகதி தமிழக பொலிஸார் கைது செய்து மத்திய அரசிடம் ஒப்படைத்தனர்.இவர் தொடர்பான வழக்கையும் என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

லெட்சுமணன் மேரி பிரான்ஸிக்குடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னாண்டோ, கே.பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், எல்.செல்லமுத்து ஆகியோர் மீது கடந்த ஜனவரி 18ஆம் திகதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்குகள் தொடர்பாக கருத்து தெரிவித்த என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து இந்திய கடவூச்சீட்டு உள்ளிட்டவற்றை இவர்கள் பெற்றுள்ளனர்.

போலி இந்திய ஆவணங்களை வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கம் செய்யும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மும்பை ஃபோர்ட் கிளையில் பெருந்தொகையான பணத்தை பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் முயற்சி - இந்திய விசாரணை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version