காலிக்கு வெள்ளிக்கரண்டி. நுவரெலியாவுக்கு வெறும் தகரம்

காலிக்கு வெள்ளிக்கரண்டி; நுவரெலியாவுக்கு தகரம்: இப்படி இனப்பாரபட்சம் காட்டிவிட்டு அம்பிகாவை சாடுவது ஏன்? என தமிழ் தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது கடந்த ஆட்சியின் போது, 29 ஒக்டோபர் 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியின்படி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பழைய பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டோ, தரமுயர்தப்பட்டோ புதிய முழுமையான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்க முடிவு என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

தற்போதைய அரசாங்கம் அதனை செய்யவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். “அரசாங்க உடன்பாடு ஏற்பட்டு வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்படுவதுதான், இதில் மிக முக்கிய அங்கம். அதை நாம் செய்து முடித்து விட்டோம். ஆட்சி முன்கூட்டியே கலைக்கப்பட்டது.

இன்றைய ஆட்சி நாம் விட்ட இடத்தில் இருந்து முன் கொண்டு செல்ல வேண்டும். காலிக்கு மாத்திரம் முன்கொண்டு செல்கிறார்கள். நுவரேலியாவுக்கு இல்லை. அப்படியானால், இந்நாட்டில் நாம் மாற்றாந்தாய் மக்கள். இதுதான் பாரபட்சம்.

இதன்படி புதிதாக வந்த இந்த ஆட்சியில், காலியின் பழைய உப பிரதேச செயலகங்கள், புதிய முழு பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டு கோலாகலமாக திறந்தும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதே அரசாங்க வர்த்தமானியில் கூறப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்திற்கான ஐந்து மேலதிக முழு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை உதாசீனம் செய்து விட்டு, இரண்டு உப பிரதேச செயலகங்களை மாத்திரம் பெயரளவில் இந்த அரசாங்கம் திறந்து வைத்துள்ளது.” என என மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இந்த அரசாங்கம் செயற்படும் நிலையில் “ஏன் மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா சற்குருநாதன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய சாட்சியத்தில் இந்நாட்டில் இன பாரபட்சம் இருப்பதாக கூறியது கண்டு வெளிநாட்டு அமைச்சர் ஜி. எல். பீரிஸ், இந்த வயதான வேளையில், பூமிக்கும், வானத்துக்குமாக குதிக்கிறார்? என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கீழுள்ள விடயங்கள் தெரிவிக்கபப்ட்டுள்ளன.

மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா ஒரு நீண்ட கால மனித உரிமை போராளி. அவரை நான் 2005ம் வருடம் முதல் அறிவேன். கொழும்பில் வெள்ளை வேன் கடத்தல்களுக்கு எதிராக எமது மக்கள் கண்காணிப்பு குழு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அவர் எம்முடன் இணைந்து செயற்பட்டார்.

அவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய சாட்சியத்தில் இந்த பிரதேச செயலகங்கள் பற்றி கூறினாரோ என எனக்கு தெரியாது. ஆனால் இந்நாட்டு இன பாரபட்ச நடப்பில் இது ஒரு சிறிய உதாரணம்.

கடந்த 74 வருட காலமாக இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு உரிமை பகிர்வு, அபிவிருத்தி இரண்டிலும், பித்தளை, தகர கரண்டிகள்தான் காட்டப்பட்டுள்ளன. அத்தனைக்கும் காலியை விட, நுவரேலியாவில்தான் இந்த பிரதேச செயலக பிரிவில் ஜனத்தொகை அதிகம்.

நீண்டகாலமாக அங்கே பிரதேச சபைகளே போதுமானளவு இல்லாமல் இருந்து அவற்றை நாமே பிரித்து பெற்றுக்கொடுத்தோம். இப்போது அவற்றுக்கு சமாந்திரமாக பிரதேச செயலகங்களை கேட்டால் கிடைக்கவில்லை. அமைச்சரவை தீர்மானம் எடுத்து வர்த்தமானி பிரகடனம் செய்தாலும் கிடைக்கவில்லை.

ஆனால், அதே வர்த்தமானியில் நுவரேலியாவுடன் சேர்ந்து அறிவிக்கப்பட்ட காலிக்கு கொடுக்கிறீர்கள். நுவரேலியாவில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். ஒருவேளை நுவரேலியாவில் தமிழர் வாழாவிட்டால் கிடைத்திருக்கும். அப்படியானால், இதுதானே இன பாரபட்சம்?

வெள்ளி கரண்டி பெரும்பான்மை மக்களுக்கு என்றால், ஏனைய மக்களுக்கு பித்தளை கரண்டி. மலையக மக்களுக்கு பித்தளை கரண்டிகூட கிடைப்பதில்லை. வெறும் தகரம்தான். அதனால்தான் பிரதேச சபைகள் பெறுவதற்கே 1987ல் இருந்து முப்பது வருடங்கள் நமது மக்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பங்காளி ஆகும்வரை காத்திருந்தார்கள்.

இத்தகைய இன பாரபட்சங்களைதான் அம்பிகா சற்குருநாதன் எடுத்து கூறியுள்ளார் என்பதை படித்த பேராசிரிய அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எடுத்து கூறுகிறேன்.

காலிக்கு வெள்ளிக்கரண்டி. நுவரெலியாவுக்கு வெறும் தகரம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version