தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி தொலைக்காட்சியின் இலட்சனையிலிருந்து தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகியன நீக்கப்பட்டு சிங்கள மொழி மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் சமூக ஊடகங்கள் மூலமாக பகிரப்பட்டிருந்தது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டிருந்தார். அத்தோடு ஊடக துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும உடன் தொலைபேசி மூலமாக இந்த விடயம் தொடர்பில் தனது அதிருப்தியினை தெரியப்படுத்தியதோடு, ஏன் இவ்வாறு செய்யப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் தொலைபேசியில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும உடன் பேசிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
“சற்று முன், ஊடகதுறை அமைச்சர் டல்லஸ் அளகபெரும வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை ஆழமாக சுட்டிக்காட்டினேன்.
இது பற்றி இன்றுகாலை எனது அதிகாரபூர்வ டுவீடர் தளத்திலும் எனது முறைப்பாட்டை தெரிவித்து, அதை அமைச்சருக்கும் பகிர்ந்துள்ளேன்.
“தேசிய” ரூபவாஹினி கூட்டுத்தாபணம், “தேசிய” மற்றும் “இணைப்பு” மொழிகளை தனது “அடையாள குறியீட்டில்” இருந்து திடீரென தவிர்த்து கொண்டிருப்பது, கண்டிக்கத்தக்கது என கூறினேன்.
தனியார் ஊடக நிறுவனங்கள் தங்களது, அடையாளத்தை எவ்விதமாக காட்டி, திருத்திக்கொண்டாலும், அரசாங்கத்தின் தேசிய ஊடக நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை ஏற்க முடியாது என கூறி உள்ளேன்.
இதை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் தன்னிச்சையாக மேற்கொண்டாரா? அல்லது அரசாங்கத்தின் கொள்கையாக என அமைச்சரிடம் வினவினேன்.
மும்மொழிகளும் ஒன்றாக பல்லாண்டுகளாக இருந்ததை, இன்று பிரிப்பது என்பதுதான் பிரிவினைவாதம் எனவும் கூறினேன்.
எனது கருத்துகளுக்கு அமைதியாக செவிமடுத்த அமைச்சரும், எனது நண்பருமான டலஸ் அளகபெரும, இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.”
கடந்த அரசாங்கத்தின் அரச கரும மொழிகள் அமைச்சராக செயலாற்றிய மனோ கணேசன், இலங்கையின் மொழி கொள்கை தொடர்பில் கடுமையாக செயலாற்றியவர் என்பதுடன், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட இடங்களில் உடனடி நடவடிக்கைகள் எடுத்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
