எரிபொருள், மின் தடை சிக்கல் நிறைவடைகிறது?

நாளை முதல் எரிபொருள் பிரச்சினை முடிவுக்கு வருமெனவும், மார்ச் 05 ஆம் திகதி முதல் மின்வெட்டு நிறைவுக்கு வருமெனவும் ஜனாதிபதிக்கு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (02.03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின் தடை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, வலுசக்தி அமைச்சர் உதய கம்பன்பில, மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர உட்பட மின்சாரசபை, பெற்றோலிய கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த கூட்டத்தில் பணிப்புரை விடுத்தார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர், தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், நாளை (03.03) முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும். எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருள் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும், பொதுமக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள், மின் தடை சிக்கல் நிறைவடைகிறது?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version