“நாடு நாசம். நாட்டை காப்போம்”
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் கொழும்பில் ஆரம்பித்தது. கொழும்பு மாளிகாவத்தையில் இந்த பேரணி ஆரம்பித்துள்ளது. இந்த பேரணி எதிர்க்கட்சி தலைவரது அலுவலகம் அமைந்துள்ள கொழும்பு தேசிய நூலக சந்திக்கு சென்று, அங்கிருந்து அடுத்த கட்ட நகர்வு இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.
ஜனாதிபதி எங்கிருந்தாலும் அந்த இடத்துக்கு சென்று அவரை சந்தித்து மகஜரை கையளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஆகவே எங்கு பேரணி நிறைவடையவுள்ளது என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அறிவிக்கவில்லை.
பேரணி ஆரம்பித்துள்ள நிலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். வாகன ஓட்டுனர்கள் மாற்று வழிகளை பாவிப்பதன் மூலம் நெரிசல்களை தவிர்த்து கொள்ள முடியும்.
பல்லாயிர கணக்கில் இந்த பேரணியில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பு மக்களை மட்டுமன்றி, இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு போன்ற விடயங்களை குறி வைத்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியினை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ளது.
