மோடி – பசில் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இன்று இந்தியா புது டெல்லியில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆட்டிகல ஆகியோர் இந்தியாவுக்கு பயணமாகியிருந்தனர்.

இலங்கைக்கு எப்போதும் இந்தியா பக்க பலமாக இருக்குமெனவும், இலங்கை நெருக்கமான அயல் நட்பு நாடு எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் சந்தித்த இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் மூலமாக இலங்கைக்கு இந்தியா வழங்குவதாக உறுதியளித்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணம் இலங்கைக்கு விரைவில் கிடைக்கும் வாய்ப்புகளுள்ளதாகவும், அதன் மூலம் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்குமென இந்திய ஊடகம் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பிலும், அதற்க்கான கடன்களை பெற்றுக் கொள்வதற்காகவும், அவை தொடர்பான விடயங்களை பேசுவதற்காகவும் பசில் ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இந்த விடயங்கள் தொடர்பிலான முதற் கட்ட பேச்சுவார்த்தைக்காக பசில் ராஜபக்ஷ இந்தியா சென்று வந்திருந்தார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கையின் இக்கட்டான நிலையில் உதவியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவினை தொடர்வது தொடர்பாகவும் பேசப்பட்ட அதேவேளை விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி, டிஜிட்டல் மயமாக்கல், மீன்பிடி துறை, சுற்றுலா துறை ஆகியவற்றின் மேம்படுத்தல்கள் தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராக்கொடவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

மோடி - பசில் சந்திப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version