லிற்றோ 12.5 KG எரிவாயு சிலிண்டர் வாயுவின் விலையினை 2000 ரூபாவினால் அதிகரித்தால் மட்டுமே தமது நிறுவனத்தை நட்டத்திலிருந்து மீட்க முடியுமென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய விலையில் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டால் இன்னமும் 3 மாதத்துக்குள் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்படுமென அந்த நிறுவனம் கூறியுள்ளது.
2021 ஆம் ஆண்டு நுவர்வோர் அதிகார சபையினால் நிராகரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மூலமாக 11 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுளதாக லிற்றோ நிறுவனம் கூறியுள்ளது. இறுதியாக இறக்கப்பட்ட ஒரு கப்பலின் சிலிண்டர்கள் மூலமாக 200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக LP லிற்றோ நிறுவனத்தின் உயரதிகாரி பியால் கொலம்பஹெட்டிகே ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் 2675 ரூபாவிற்கு விற்பனை செய்வதனாலேயே இந்த நட்டம் ஏற்பட்டுளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். லிற்றோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையினை 4675 ரூபவாக அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையினை முன் வைத்து வருகிறது.
விலையதிகரிப்பு தொடர்பில் தாம் எந்தவித அனுமதியினையும் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரவில்லையெனவும், தமது நிறுவனத்தின் நிலைமையை மக்களுக்கு அறிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வரிசையில் காத்திருக்கும் மக்கள், பல இடங்களில் அதிக விலைக்கு வாங்குவதாகவும் அறிய முடிகிறது. சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கப்படும் நிலை ஏற்பட்டால் மக்கள் மேலும் கஷ்டத்துக்குள் தள்ளப்படுவார்கள். உணவு தயாரிப்புகள் விலை அதிகரிக்கப்படும். வீடுகளில் உணவு தயாரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும். மக்கள் உணவுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கிராம புறங்களில் உள்ளவர்கள் விறகு அடுப்பின் மூலம் சமாளித்து கொள்ள முடியும். ஆனால் நகர புற மக்களின் நிலைமை மோசமாக பாதிக்கப்படும். அதிலும் கொழும்பு போன்ற இடங்களில் வாழும் மக்களின் நிலைமை மேலும் மோசமடையும்.