தமிழருக்கான தீர்வை உறுதி செய்யும் அரசியல் மாற்றத்தையே பரிசீலிப்போம்- ரெலோ

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான காலவரையறையை ஏற்றுக் கொண்டாலே அரசியல் ஆட்சி மாற்றங்களில் கரிசனை கொள்ளமுடியும் . இல்லையேல் எந்த மாற்றங்களும் தமிழ் மக்களுக்கு அர்த்தமற்றதாகிவிடும் என தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தெரிவித்துள்ளது.

தாம் துல்லியமாக கணித்தபடி கடுமையான பொருளாதாரச் சிக்கலினாலும் உள்ளக அரசியல் மாற்றங்களினாலும் பாரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது எனவும், பெரும்பான்மையாக வாக்களித்து தெரிவு செய்த அரசாங்கத்தை வாக்களித்த மக்களே எழுச்சி கொண்டு துரத்தி அடிக்கும் சூழ்நிலை பிறந்துள்ளதாகவும், இந்த நேரத்தில் தற்காலிக அரசாங்கமா, இடைக்கால அரசாங்கமா காபந்து அரசாங்கமா என புதிய ஏற்பாட்டினை மேற்கொள்வதற்கு அரசும் எதிர்க்கட்சிகளும் முனைந்துள்ளது எனவும் டெலோ வெளியிடுட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை,

மாறி வந்திருக்கும் இந்த அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பு எப்படி கையாளப் போகிறது என்பதில்தான் எமது இனத்தின் எதிர்காலம், தீர்வு என்பன தங்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “எம்மினம் முகம் கொடுத்திருக்கும் அன்றாட பிரச்சினைகளுக்கும் நீண்ட காலமாக கோரி வரும் அரசியல் தீர்வுக்கும் முடிவை எட்ட இந்தச் சூழ்நிலையை சரியான முறையில் நாம் கையாள வேண்டும். அந்தந்த தரப்புக்களோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்பதோ, அழைத்தவுடன் சென்று பேசுவதோ, ஓரிருவர் முடிவிலோ அல்லாமல் சரியான முறையிலே கையாளுவது தற்பொழுது தேவையாக உள்ளது” என மேலும் தெரிவிக்கப்பட்டுளளது.

“கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு கூட்டமைைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்து கொள்வதற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய சில நிபந்தனைகளை ரெலோ கோரியிருந்தது அனைவரும் அறிந்ததே.

அரசியல் கைதிகள் விடுதலை, எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பை உடனடியாக நிறுத்துதல், அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், சர்வதேச ஏற்பாடுகளுக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான விசாரணை மற்றும் நீதி, அரசியல் யாப்பில் உள்ள அதிகாரப் பகிர்வினை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் என்பன மிகக்குறைந்த பட்ச விடயங்களாக கருதப்படுகின்றன. பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையோடு இவற்றை நிறைவேற்ற முடியும்.

ஆகக்குறைந்தது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தரப்புடன் பேசுவது பற்றிய பரிசீலனையை நாம் மேற்கொள்ள முடியும். இதுவே எம்மினம் சார்ந்து செய்யக்கூடிய சரியான அரசியல் நகர்வாக தற்போதைய சூழ்நிலையில் அமையும்” என டெலோவின் ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தமிழருக்கான தீர்வை உறுதி செய்யும் அரசியல் மாற்றத்தையே பரிசீலிப்போம்- ரெலோ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version