சித்திரை புதுவருட ராசி பலன்கள் – 2022 – மேஷம்

சித்திரை புதுவருட ராசி பலன்கள் - 2022 - மேஷம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் மேஷ ராசி – 14.4.22 முதல் 13.4.23 வரை

சுயமரியாதை மிகுந்த மேஷ ராசி அன்பர்களே!

சுபகிருது புத்தாண்டு பிறக்கும்போது, சுக்கிரன் உங்களின் ராசிக்கு லாப வீட்டில் பலம் பெற்றிருக்கிறார். ஆகவே, துவண்டுபோயிருந்த நீங்கள் உற்சாகம் அடைவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

உங்களுக்கு 5-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு உடனே திருமணம் முடியும். எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி ஏமாந்தீர்களே… இனி, யாரிடம் என்ன பேச வேண்டும் என்ற தெளிவு பிறக்கும்.

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்:

வருடம் முடியும் வரை ராசிக்குள் ராகுவும், ராசிக்கு 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தைக் குறையுங்கள். மின்சாரம், நெருப்பு ஆகிவற்றைக் கவனமாகக் கையாளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். யாருக்காகவும் பிணை, சாட்சி கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கைத் துணைவருடன் வீண் ஈகோ பிரச்னைகள் வேண்டாம்.

12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். `எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே’ என ஆதங்கப்படுவீர்கள். பண முதலீடு, வட்டி தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரம் இல்லாமல் யாருக்கும் பணம் வழங்க வேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக்கொள்வது நல்லது.

மேஷம்
25.9.22 முதல் 19.10.22 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்- மனைவிக்குள் கருத்துமோதல், வாகன விபத்து வந்து நீங்கும். தங்க நகைகள் தொலைந்து போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுபகிருது ஆண்டு முழுவதும் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். உங்களைப் புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு…

அடிக்கடி இடமாற்றம் வந்துபோகும். மேலதிகாரி உங்கள் திறமையைக் குறைத்து மதிப்பிடுவார். மறைமுக அவமானங்கள் ஏற்படக்கூடும்.

உத்தியோகஸ்தர்களே! உங்களைக் குறை கூறுவதற்கென்றே ஒருசிலர் இருப்பார்கள். அவர்களின் கருத்தைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் கடமையைச் செய்யுங்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். கணினித் துறையினர் புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்கவும்.

வியாபாரிகளுக்கு…

தொழிலில் ஏற்ற – இறக்கங்கள் இருக்கவே செய்யும். போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து விற்பனை செய்யுங்கள். கூட்டுத் தொழிலில், பங்குதாரர்கள் கடுமையாக பேசினாலும் நீங்கள் கனிவாகப் பேசுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். காணி விற்பனை துறை, கம்ப்யூட்டர், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் பெரும் லாபம் அடைவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு ஒருபுறம் அலைச்சல்-செலவுகளைக் கொடுத்தாலும், மறுபுறம் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்வதாக அமையும்.

Social Share

Leave a Reply