சித்திரை புதுவருட ராசி பலன்கள் – 2022 – கடகம்

சித்திரை புதுவருட ராசி பலன்கள் - 2022 - கடகம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் கடக ராசி – 14.4.22 முதல் 13.4.23 வரை

பதவி, பணத்திற்கு வளைந்துக் கொடுக்காதவர்களே!

இந்த சுபகிருது வருடம் உங்களுக்கு 2-வது ராசியில் பிறப்பதால் பக்குவமாகப் பேசி பல விஷயங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் ஓரளவு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.

புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறப்பதால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். புது வேலை கிடைக்கும். எவ்வளவு போராடினாலும் சில பணிகளை முடிக்கமுடியாமல் திணருனீர்களே! இனி விரைந்து முடிக்கும் அளவிற்கு நேரங்காலமும் முழு ஒத்துழைப்பு தரும். வீடு கட்டும் வேலை இனி சுறுசுறுப்பாக நடக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தாருடன் இனி வீண் வாக்குவாதங்கள் இருக்காது. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். எப்பொழுதோ வரவேண்டிய பணம் இப்பொழுது வந்து உங்களுக்குக் கைகொடுக்கும்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வெளி நபர்களை விட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். சொத்து வாங்கும் போது தாய்ப்பத்திரத்தை சரிபார்ப்பது நல்லது.

ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால் வேலைச்சுமை, டென்ஷன் வரக்கூடும். ஆனால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கேது 4-ல் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை, பகைமை வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

உங்களின் பாக்யஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்…

07.12.2022 முதல் 30.12.2022 வரை உள்ள காலகட்டங்களில் வேலைச்சுமை அதிகரிக்கும். கால் வலி, கழுத்து வலி, தொண்டை புகைச்சல் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு, கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சொந்த வாகனத்தில் அதிகாலைப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

14.04.2022 முதல் 17.05.2022 வரை செவ்வாய் 8-ல் நிற்பதால் முன்கோபம் அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும்.

வியாபாரிகளுக்கு…

வியாபாரிகளே, போட்டியாளர்களை திக்குமுக்காட வைக்கும்படி சில அதிரடி திட்டங்களை செய்வீர்கள். விளம்பர யுக்தியால் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத்தீர்ப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு மாற்றுவார்கள். இரும்பு, உரம், உணவு, எண்ணெய் வகைகள் மூலம் நல்ல லாபம் உண்டு. வேலையாட்களிடம் அரவணைப்பாகப் பேசுவது நல்லது. கூட்டுத்தொழிலில் இருந்து வந்த பிணக்குகள் விலகும். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். அதிக முன் பணம் யாருக்கும் தர வேண்டாம். மார்கழி, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வேற்று மதத்தினர், வெளிநாட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு…

உத்யோகஸ்தர்களே, உங்களைப் பற்றி அவ்வப்போது விமர்சினங்களும், குறைகளும் வந்த வண்ணம் இருக்கும். ஆடி மாதத்தில் உங்களுக்கு வேண்டப்பட்ட உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மார்கழி மாதத்தில் சம்பளம் உயர்வுடன் சலுகைகளும் உண்டு. கணினி துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். புது வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் அவசரம் வேண்டாம். கலைஞர்களே, சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு.

இந்த சுபகிருது ஆண்டு ஒருபக்கம் அனுபவ அறிவையும், செலவையும் தந்தாலும், மற்றொரு பக்கம் திடீர் வருமானத்தையும், செல்வாக்கையும் தருவதாக அமையும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version