இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது. சபாநாயகரை பொய்க்காரன் என கூறிய சஜித் பிரேமதாச தான் பாராளுமன்றத்தில் பொய் சொல்ல வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
தான் பொய் எதனையும் கூறவில்லையெனவும், தான் கூறிய விடயத்தை எதிர்கட்சி தலைவர் மாற்றி கூறுவதாகவும் சபாநாயகர் கூறினார்.
கட்சி தலைவர்களது கூட்டத்தில், “கட்சி தலைவர்கள் கோரினால் தான் பதவியினை விட்டு விலக தயாராக இருப்பதாக ஜனாதிபதி தனக்கு தெரிவித்தார்” என சபாநாயகர் கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததனை மறுத்த சபாநாயகர் தான் அவ்வாறு கூறவில்லை என தெரிவித்தார்.
“கூறியதனை கூறவில்லை என கூறவேண்டாமெனவும், சபாநாயகர் அப்பட்டமான பொய் காரர் எனவும், சபாநாயகர் சொல்லாததனை சபையில் சொல்ல தான் முட்டாள் அல்ல எனவும், சபாநாயகர் இந்த விடயத்தை கூறும் போது அமைச்சர் டினேஷ் குணவர்தன தனக்கு அருகில் இருந்ததாகவும், அவருக்கு அந்த விடயம் கேட்டிருக்குமெனவும்” கூறினார். அத்தோடு சபாநாயகர் கூற முற்பட்ட விடயத்தை கூறும் போது மாறி கூறியிருக்கலாமெனவும் தெரிவித்தார்.
“தான் அவ்வாறு கூறவில்லையெனவும் “113 இருந்தால் தான் விலகுவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக கூறியதாகவும் , அதனை மாற்றி சஜித் பிரேமதாசா கூறுவதாகவும்” சபாநாயகர் தெரிவித்தார்.
இந்த விடயம் இருவருக்குமிடையில் வாக்குவாதமாக பாராளுமன்றத்தில் 05 நிமிடங்கள் வரை சென்றது. அத்தோடு “கட்சி தலைவர்கள் கோரினால் தான் பதவி விலக தயார்” என ஜனாதிபதி கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.
